சீன எல்லையையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கிராமங் களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து பெரியளவில் வெளியேறிவருவது, எதிரி நாட்டுக்கு விடுக்கப்படும் வெளிப்படையான அழைப் பாகிவிடும் என்று பா.ஜ.க. எம்பி தருண் விஜய் எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத் தலை நகர் டேராடூனில் அவர் கூறும்போது, ''உத்தரகாண்டின் தொலைதூர எல்லைப் பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் வேலை வாய்ப்பு தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்தப் போக்கினைத் தடுத்த நிறுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை சுகாதாரம் மற்றும் கல்விவசதிகள் ஆகியவை செய்துகொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

உத்தரகாண்டில் மலைப் பகுதிகளில் அமைந்துள்ள எல்லைப்புற கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதால் மனிதநடமாட்டம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இது நமது எதிரிநாடான சீனாவுக்கு விடுக்கப்படும் வெளிப்படையான அழைப்பாகிவிடும். எனவே எல்லை பகுதிகளில், குறிப்பாக இமயமலை பகுதிகளில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டிய அவசரத்தேவை ஏற்பட்டுள்ளது.

கிராமவாசிகள் இடம் பெயர்ந்ததால், சமோலி மாவட்டத்தின் பாரா ஹோதி, பிதோராகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சி மற்றும் மிலாம் பனி மலைப் பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நான் முன்ஷியாரி முதல் மிலாம் பகுதி வரை சுமார் 105 கி.மீ. தூரத்துக்கு மலையேறிச்சென்று பார்த்தேன். அந்தப் பகுதிகள் எல்லாம் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

அரியவகை மான்களுக்காகவும், போஜ் பாத்ரா வனத்துக்காகவும் உலகப் புகழ்பெற்ற இப்பகுதியில் தற்போது ஒருசில குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இதனால் வேட்டைக் காரர்களுக்கு எந்த தடையுமின்றி விலங்குகளை சட்ட விரோதமாக வேட்டையாட நல்லவாய்ப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.