முல்லை பெரியாறில் புதிய அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளிக்காது, கடற்படையால் சிறை பிடிக்கப் பட்டிருக்கிற நம்முடைய 100-க்கும் மேற்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்கும் நடவடிக்கையை துரிதப் படுத்த வேண்டும். என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

 தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப் பட்டிருக்கிற நம்முடைய 100-க்கும் மேற்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்கும் நடவடிக்கையை துரிதப் படுத்த வேண்டும். இருதரப்பு மீனவர்களின் பேச்சு வார்த்தை துரிதப்படுத்த வேண்டும். இருநாட்டு அரசாங்கங்களின் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினேன். இந்தமாத இறுதிக்குள்ளாக இந்த பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புண்டு. தொடர்ந்து படகுகளை விடுவிக்க கூடிய எல்லா முயற்சியிலும் சுஷ்மா சுவராஜ் ஈடுபட்டுவருவது எனக்கு தெரியும். இந்தமுயற்சி தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தை திருப்திகரமாக சென்றால் நிச்சயமாக நம்முடைய மீனவர்கள் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்ககூடிய ஏற்பாடுகள் நடைபெறும்.

காவிரி விஷயத்தில் ஒன்று நம்முடைய உரிமையாக இருக்கக்கூடிய 105 டி.எம்.சி. தண்ணீரை பெற வேண்டும். மற்றொன்று மழை நேரத்தில் பெய்கின்ற தண்ணீர்வடிந்து வீணாக கடலில் சேருவதை தடுக்க தடுப்பணைகள் கட்டவேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தண்ணீரை அந்தமாநிலங்கள் நமக்கு தராமல் தடுத்து நிறுத்துவதும், அணைகள் கட்டுவதும் தொடர்சம்பவங்களாக இருந்து வருகிறது. நமது உரிமைக்காக கட்டாயம் போராட வேண்டியது நமது கடமை. அதேநேரத்தில் தண்ணீரை நாம் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றபிறகு தான் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்குமேல் தண்ணீரை தேக்கி வைக்க அனுமதிக்கமாட்டோம் என்று கேரளா அரசு சொல்லிவந்தது. ஆனால் இன்றைக்கு 142 அடியாக உயர்த்தப் பட்டுள்ளது. மத்திய அரசின் குழு இதை நிறைவேற்றவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது.

முல்லை பெரியாறில் புதிய அணைகட்ட மத்திய அரசு அனுமதிக்காது. இதேபோல் தான் காவிரி பிரச்சினையை கண்காணித்து வருகிறோம். எல்லா பிரச்சினைக்கும் ஒரேநேரத்தில் தீர்வு காண வேண்டும் என்றாலும் கூட இருமாநிலங்களுக்குள் இருக்கும் உறவுகள் சுமுகமாக போனால்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் பலன் தரக்கூடியவகையில் அமையும்.

50 ஆண்டுகளில் தமிழகத்தை வாழவைத்தவர்கள் சமஸ்கிருதத்தை எதிர்க்கிறார்கள். முதலில் அவர்கள் தமிழை காப்பாற்றும் வழியை பார்க்கவேண்டும். இந்த 50 ஆண்டுகளில் தமிழ் அழிந்து இருக்கிறது. தமிழன் அழிந்துகொண்டு இருக்கிறான். வருங்கால தலைமுறையின் தலை எழுத்தை சீரழித்துகொண்டு இருக்கிறார்கள்.

கேரளா, கர்நாடகம், ஆந்திராவில் இந்தி படிக்கிறார்கள். அங்கெல்லாம் மாநிலமொழிகள் அழியவில்லை. அவர்கள் எல்லா துறையிலும் முன்னேறி கொண்டு இருக்கிறார்கள். நாம் பின்னோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம். நம்முடைய தலை முறைகள் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கட்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழ்நாட்டுமக்கள் மனநிலை தற்போது இல்லை. தற்போதைய இளைஞர்கள், மாணவர்கள் அவர்களை (இந்தி, சமஸ்கிருதத்தை எதிர்ப்பவர்கள்) அடையாளம் கண்டு விட்டனர். அவர்களது முயற்சி பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.