கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1,000 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட முதலாவது அலகினை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் கூட்டாக புதன் கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

உலகின் மிகவும் பாதுகாப்பான அணு மின் நிலையங்களில் இதுவும் ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அலகினை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் முறையே தில்லி, சென்னை, மாஸ்கோ நகரங்களில் இருந்தபடி, காணொலி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி: முதலாவது அலகினை நாட்டுக்கு அர்ப்பணித்த பிறகு தில்லியில்இருந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்திய-ரஷிய கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் முதலாவது அலகானது, மாசற்ற மின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் தொடர் முயற்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் உள்ளது.

ரஷியாவுடனான உறவை இந்தியர்கள் பெரிதும்விரும்புகின்றனர். தனிப்பட்ட முறையில் நானும் இருநாட்டு நட்புறவுக்கு பெரிதும் மதிப்பளிக்கிறேன். எனவே, நாம் கூட்டாக இணைந்து கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதலாவது அலகினை நாட்டுக்கு அர்ப்பணிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இந்தநிகழ்வு, இந்திய-ரஷிய கூட்டுறவில் வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமையான வளர்ச்சிப் பாதையை உருவாக்கவேண்டியது நம் இருவரின் (ரஷியா-இந்தியா) கடமை என்பதை இந்நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது. இது, இருநாட்டு நல்லுறவின் வலிமைக்கு மற்றோர் உதாரணமாக மட்டுமன்றி, நமது நட்புறவைக் கொண்டாடும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும், அணுசக்தித் துறையில் நமதுகூட்டு ஒத்துழைப்புக்கான தொடக்கமே இந்த நிகழ்ச்சி.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட மேலும் 5 அலகுகள் உருவாக்கப்படும்.

அணுமின் நிலையத்தை உருவாக்கிய இந்திய, ரஷிய விஞ்ஞா னிகள் குழு, தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஆகியோருக்கு இந்நாள், மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்துள்ளது. அவர்களின் கடுமையான உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நான் தலைவணங்குகிறேன். மேலும், அவர்களின் உழைப்புக்கு பலன் கிடைத்திருப்பதற்கு அவர்களை வாழ்த்துகிறேன் என்றார் மோடி.

 

அதைத் தொடர்ந்து, ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் பேசியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையம், சாதாரணவசதிகளுடன் மேம்போக்காகக் கட்டப்படவில்லை. அது, ரஷியாவின் அதிநவீன தொழில்நுட்பவசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அணுசக்தி தொழில்நுட்பத்தில் உலகளவில் ரஷியா முன்னணியில் இருப்பது யாவரும்அறிந்ததே. எங்களது தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.