மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக சட்டசபை கூட்ட நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புசெய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


சுதந்திரதின விழா மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்க 75-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு பா.ஜனதா சார்பில் தேசியகொடி பேரணி நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தேசியகொடியுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டியவாறு பேரணியில் பங்கேற்றார்.முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடக அணைகளில் நீர்இருப்பு குறைவாக இருப்பதாகவும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கஇயலாது என்றும் முதல்மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக அரசு அங்கு அதிகமழை பெய்யும்போது உபரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுகிறது. அதன் மூலம் தமிழகத்துக்கு கொடுக்கவேண்டிய தண்ணீரை தந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

பஞ்சம் ஏற்படுகிற சூழ்நிலையிலும் அங்குள்ள தண்ணீரை பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால் நமது உரிமைகளை கர்நாடக அரசு தரமறுக்கிறது.காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகவிவசாயிகள் வருகிற 30-ந்தேதி நடத்த இருக்கின்ற போராட்டத்திற்கு ஒவ்வொரு தமிழனும் ஆதரவுகொடுக்க வேண்டும். பா.ஜனதா கட்சியின் நிலைப்பாடு குறித்து தமிழக தலைமைதான் முடிவு செய்யும். காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற சுப்ரீம் கோர்ட்டை நாடப்போவதாக சட்ட சபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

சட்டமன்ற பிரச்சினை தொடர்பாக சபாநாயகர் உருவ பொம்மையை எரித்த சம்பவம் அநாகரிகமான செயலாகும். திமுக. எம்.எல்.ஏ.க்களை கூண்டோடு அப்புறப்படுத்தியதும் தவறானதுதான். பாராளுமன்ற கூட்டத்தொடர் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவது போன்று சட்டப்பேரவை நிகழ்வுகளையும் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

ஆந்திராவில் சிறைப்பிடிக்கப்பட்ட 32 தமிழர்களை மீட்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த சம்பவத்தில் தவறுசெய்த அதிகாரிகள் மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சபரிமலையில் தரிசன முறை குறித்து கேரள முதல்மந்திரி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மதத்தை சார்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு வழிபாட்டுமுறை உள்ளது. அதை பின்பற்ற அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. எனவே இதில் அரசு தலையிட உரிமை இல்லை.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.