இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்குடுத்தல் அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தின் 17பி பிரிவுக்கு எதிரானது அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்துகொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இழப்பீடுகோரும் உரிமையை இந்திய அணுமின்சக்தி நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்) விட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளதாக பாஜக. கவலைதெரிவித்துள்ளது.

ஒரு அணுமின்நிலையத்தை நடத்தும் நிறுவனம், அணுஉலைக்கான பாகங்களை சப்ளைசெய்யும் நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்து கொள்ளும்போது, இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்கொடுக்க முடியும் என மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக. மூத்த தலைவர் அருண்ஜேட்லி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

அணு சக்தி ஒப்பந்தத்தில் இழப்பீடுகோரும் உரிமையை விட்டுக்கொடுக்குமாறு மத்திய அரசுக்கு அணு உலைபாகங்களை சப்ளைசெய்யும் அமெரிக்க நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்துவருகின்றன. இந்த உரிமையை விட்டுக்கொடுக்குமாறு இந்திய அணுமின்சக்தி நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டால், நாட்டுவருவாயில் சமரசம்செய்யும் நடவடிக்கையாகவே அது அமையும். அவ்வாறு செய்துகொள்ளப்படும் ஒப்பந்தமானது அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தின் 17பி பிரிவுக்கு எதிரானதாக இருக்கும்.

ஒரு பொதுத் துறை நிறுவனமானது வெளிநாட்டுநிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம்செய்து கொள்ளும்போது, இழப்பீடு கோரும் உரிமையை விட்டுக்கொடுத்தால் அது, அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டத்தை மீறும்செயல் மட்டுமின்றி, ஊழல் தடுப்புச்சட்டத்தை மீறுவதாகவும் அமையும். ஏனெனில், இதனால் அரசுவருவாய்க்கு தவறான முறையில் இழப்பு ஏற்படும்.

மக்களவையில் முதலில் அறிமுகம்செய்யப்பட்ட அணு உலை இழப்பீட்டு சட்டத்துக்கான மசோதாவில், இழப்பீடுகோரும் உரிமையை கட்டாயமாக்கும் வகையில் 17ஆவது ஷரத்து அமைந்திருந்தது. பின்னர், அந்தமசோதா நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதன்பின், மசோதாதொடர்பாக பா.ஜ.க.,வுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது,பல்வேறு திருத்தங்களை நாங்கள் கூறினோம். அதைத்தொடர்ந்து, மசோதாவின் 17பி பிரிவு மாற்றி எழுதப்பட்டு, இழப்பீடுகோருவதற்கான வாசகம் கடுமையானதாக மாற்றப்பட்டது என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply