தமிழக சுதந்திரப்போராட்ட வரலாற்றை பாஜக அரசு இருட்டடிப்பு செய்யாது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் டெல்லியில் அண்மையில் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:

மத்திய அரசின் வரலாற்றுப் பாடங்களில் 1857-ல் நடைபெற்ற மீரட் சிப்பாய்கலவரம் முதல் சுதந்திரப் போராட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மாற்றி அதற்கும் முன்பாக 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் கலகம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போர், முதல் சுதந்திரப் போராக மாற்றி எழுத தமிழக பாஜக வலியுறுத்துமா?

நிச்சயமாக வலியுறுத்துவோம். பலவரலாற்று சம்பவங்கள் திரித்து கூறப்பட்டிருப்பது மாற்றப்பட வேண்டும் என்பதும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு நோக்கம். கட்டபொம்மன் நினைவிடத்திற்கு வந்த மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, “வேலூர் சிப்பாய்கலகம் மற்றும் வட இந்தியாவின் பல போராட்டங்களுக்கு முன்பாகவே அதை கட்டபொம்மன் எடுத்து சென்றிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. டெல்லியில் ஒளிபரப்பப்பட்ட 12 சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கானப் படங்களில் கட்டபொம்மன் பற்றியும் இடம் பெற்றிருந்தது. வடக்கும் கிழக்கும், மேற்கும் தெற்கும் என அனைத்தையும் இணைத்து யாருடைய சரித்திரமும் இரட்டடிப்புசெய்து விடாதபடி பாஜக அரசு பார்த்துக் கொள்ளும்” என மிகத்தெளிவாகக் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் சிலரின் சுதந்திரப்போராட்ட வரலாறுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டதே தவிர, பலருடைய வரலாறு மறைக் கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். இதுபோல் அல்லாமல் அத்தனை சுதந்திரப்போராட்ட வீரர்களின் வரலாறும் பாஜக ஆட்சியில் முன்னெடுத்து செல்லப்படும் என தெளிவாக சொல்லப் பட்டுள்ளது. எனவே, தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களின் வரலாற்று சம்பவங்களும் முறையாக ஆய்வுசெய்து பதிவு செய்யப்படும்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதிலும் போராட்டம்வெடிக்கும் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளாரே?

தமிழகத்தில் பாஜக காலூன்றமுடியாது என வைகோ சொன்னார். ஆனால், கோலூன்றி கூட நடக்க முடியாத அளவுக்கு அவரது கட்சி தள்ளாடிக் கொண் டிருக்கிறது. இன்று புதிய கல்விக்கொள்கையை சாக்காக வைத்து அவர் ஓர் அடையாளம்தேடுகிறார். புதிய கல்விக் கொள்கை இன்னும் வரைவு தீர்மானமாகத்தான் இருக்கிறது. இதற்கு வைகோ கருத்துசொல்ல வேண்டும் எனில், அதற்கான இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கு செப்டம்பர் 15 வரை காலஅவகாசம் உள்ளது என்பதை சகோதரர் வைகோவுக்கு நினைவூட்டுகிறேன். கருத்தை பதிவுசெய்ய வாய்ப்பு அளிக்கப்பட்ட பிறகும் வைகோ நடத்தும் போராட்டம், பாஜக மீதான காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுவது ஆகும்.

தமிழக சட்டப்பேரவையில் திமுக வரைமுறை மீறி செயல்படுவதாக கருதுகிறீர்களா?

நிச்சயமாக. தமிழக சட்டமன்றத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு சரியான வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ஆனால், கிடைத்தவாய்ப்பை எதிர்க்கட்சிகள் சரியாக பயன்படுத்தினார்களா என்றால் இல்லை. ஸ்டாலின் பொறுப்பான வழிநடத்தும் தலைவராக இல்லாமல் வெளிநடப்பு செய்பவராக இருந்து வருகிறார். நமக்குநாமே என்று ஏதோ சொன்னாலே வெளியேறிவிட வேண்டும் என திமுகவினர் நினைக்கிறார்கள். திமுக உறுப் பினர்களை, கருணாநிதி சட்டப்பேரவை வந்து வழிநடத்த வேண்டும் எனக் கோருகிறேன். அதேநேரத்தில், தமிழக அரசு எதிர்க்கட்சிகளுக்கு சரியான நேரத்தை அளிக்கவேண்டும். விவாதிப்பதற்கான வாய்ப்பை கொடுக்க வேண்டும். முதல்வரை பாராட்டுவதற்கான வாய்ப்பு மட்டு மின்றி மக்கள் பிரச்சினைகளை எழுப்பவும் வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு தமிழிசை பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.