உலக அளவில் பயங்கரவாதத்தை பரப்பும்செயலில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானை தனிமைப்படுத்த தேவையான அனைத்து ராஜ்ஜீய நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். உரிதாக்குதல் சம்பவத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது. இதை பயங்கர வாதிகள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். உரியில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிர்தியாகம் செய்தது வீண் போகாது என்பதை பாகிஸ்தான் தலைமைக்கு நான் தெரிவித்து கொள்கிறேன்.


உரி தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானே நேரடிபொறுப்பாகும். பயங்கரவாதத்தை பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்செயலில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இதுதான், உரியில் இந்திய ராணுவவீரர்கள் 18 பேர் உயிரிழக்கக் காரணம்.


ஆசியாவில் உள்ள ஒருநாடு (பாகிஸ்தான்), பயங்கரவாதத்தை உலகின் பிற நாடுகளுக்கு பரப்புவதை லட்சியமாக செயல்படுகிறது. 21-ஆம் நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டாக அமைந்து விடக்கூடாது என்பதை உறுதி செய்யும் திட்டத்துடன் அந்நாடு செயல்பட்டுவருகிறது. பயங்கரவாத தாக்குதல் எங்கு நடைபெற்றாலும், அதற்கு குறிப்பிட்ட ஒருநாட்டையே (பாகிஸ்தான்) அனைத்து நாடுகளும் சுட்டிக் காட்டுகின்றன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என்று உலகின் எந்த நாட்டில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடைபெற்றாலும், இந்தநாட்டில் இருந்து சென்ற பயங்கரவாதிகள்தான் காரணமாக இருப்பார்கள். அல்லது தாக்குதலை நிகழ்த்திவிட்டு, அந்த நாட்டில் (பாகிஸ்தானில்) தஞ்சமடைந்திருப்பார்கள்.


பயங்கரவாதத்துக்கு இந்தியா இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் அடிபணியாது. பயங்கர வாதத்தை இந்தியா முறியடிக்கும். பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட தற்கொலைப்படை பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் 17 முறை ஊடுருவமுயற்சிகள் மேற்கொண்டனர். இந்த முயற்சிகளை துணிச்சல்மிக்க இந்திய ராணுவவீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போது அவர்கள், 110 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். அண்மைக் காலங்களில், தற்போதுதான் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர். மானுடப் பண்புக்கு பயங்கரவாதம், மிகப்பெரிய எதிரியாகும். எனவே, உலகம் முழுவதும் இருக்கும் மனிதநேயவாதிகள், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று சேரவேண்டும்;

பயங்கரவாதத்தை ஒருமித்த குரலில் கண்டிக்கவேண்டும். காஷ்மீரைப் பிரிக்க நினைக்கும் பயங்கரவாதிகள் எழுதிக்கொடுக்கும் அறிக்கைகளை நமது அண்டை நாட்டுத்தலைவர்கள் வாசிக்கின்றனர். அத்தகைய தலைவர்களுடன் பேசுவதால் பயன்கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே இன்றுமுதல், பாகிஸ்தான் மக்களுடன் நான் நேரடியாக பேசப் போகிறேன். பாகிஸ்தான் மக்களே, உங்களது மூதாதையர்கள் கடந்த 1947-ஆம் ஆண்டுக்குமுன்பு, இந்தியாவைத் தான் தங்களது தாய்மண்ணாக நினைத்தனர்; இந்த மண்ணுக்கு மரியாதை தந்தனர்.


வங்கதேசம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பக்டூனிஸ்தான், கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகியபகுதிகளை ஏன் உங்களால் சரிவரநிர்வகிக்க முடியவில்லை என்றும், காஷ்மீர்விவகாரம் தொடர்பாகப் பேசி, எங்களை ஏன் தவறாக வழிநடத்துகிறீர்கள் என்றும், தங்களது ஆட்சியாளர்களிடம் பாகிஸ்தான் மக்கள் கேட்கவேண்டும்.


இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகவே சுதந்திரம்பெற்றன. இந்தியா மென்பொருளை ஏற்றுமதி செய்கிறது, ஆனால் பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஏற்றுமதி செய்கிறது. இதுகுறித்து தங்கள் நாட்டுத் தலைவர்களிடம் பாகிஸ்தான் மக்கள் கேட்கவேண்டும்.


இந்தியாவுடன் 1,000 ஆண்டுகளுக்கு போரிடுவோம் என்று பாகிஸ்தான் தலைவர்கள் தெரிவித்துவந்தனர். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? இந்த சவாலை இந்தியா ஏற்கிறது என்பதை பாகிஸ்தான் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தானுடன் சண்டையிட இந்தியாவுக்கும் விருப்பம்தான். ஆனால் அந்தச்சண்டை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? உங்களுக்கு துணிச்சல் இருந்தால், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், எழுத்தறிவின்மை ஆகியவற்றுக்கு முடிவுகட்டுவதற்கு ஏன் நீங்கள் சண்டையிடக் கூடாது. அப்போது, வெற்றி இந்தியாவுக்கு சொந்தமாகிறதா? பாகிஸ்தானுக்கு சொந்தமாகிறதா? என்பதை நாம்பார்க்கலாம்.


பாஜக தேசியக் கவுன்சில் கூட்டம், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் தொடங்கியுள்ளது. இதையொட்டி, கோழிக்கோடு கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியது:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.