உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகநாடு என்று மார்தட்டிக் கொள்வதிலும், இந்திய ஜனநாயகம் துடிப்புடன் செயல்படுகிறது என்று பெருமைப்பட்டுக் கொள்வதிலும் தவறில்லை. ஆனால், நமது ஜனநாயகத்தை வழிநடத்தும் அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் நடந்து கொள்ளும் முறையைப்பார்த்தால், உண்மையிலேயே நாம் பெருமைப்பட்டு கொள்ள முடியுமா என்கிற ஐயப்பாடு எழுகிறது.


கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அதிகாலையில் இந்தியராணுவம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் நமது காஷ்மீரத்தின் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள்மீது தாக்குதல் நடத்தியது. ஏராளமான பயங்கர வாதிகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். அரசு இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தனது பின்னடைவை சமாளித்து, அப்படி எந்தவிதத் தாக்குதலும் நடைபெற வில்லை என்று பாகிஸ்தான் சப்பைக் கட்டுக் கட்டலாம். ஆனால், அதை இந்தியாவில் இருப்பவர்களே வழிமொழிவது எப்படி சரியாகும்?


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லியத்தாக்குதல் நடத்தியபோது அதை வரவேற்ற காங்கிரஸும், ஏனைய எதிர்க்கட்சிகளும் இப்போது பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் கூறப்படும் செய்திகளின் அடிப்படையில், தாக்குதல் நடத்தப்பட்ட தற்கான விடியோ ஆதாரங்களை அரசு வெளியிடவேண்டும் என்று கூறுவது போன்ற அரசியல் அநாகரிகமும், முட்டாள்தனமும் வேறு எதுவுமே இருக்க முடியாது.


மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறார். முன்னாள் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரமோ, இப்படி வெளிப்படையாக விளம்பரப்படுத்திக் கொண்டு இந்திய அரசு நடத்தி இருக்கும் துல்லியத் தாக்குதல், இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள பகைமையை அகற்றுவதற்கு எந்த அளவுக்கு உதவும் என்று கேள்வி எழுப்பி, தாக்குதல் நடத்தியதை விமர்சிக்கிறார். காங்கிரஸ் கட்சி இதுகுறித்து என்ன சொல்கிறது என்று பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. முதலில், அரசின் நடவடிக்கையைப் பாராட்டிய காங்கிரஸ் இப்போது தான் ஏதோ தவறிப்போய் அரசைப் பாராட்டிவிட்டது போல பதற்றப்படுகிறது.


இந்தியா இப்படி பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது புதிதல்ல என்றும், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது 2008, 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் இதுபோலப் பல துல்லியத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் காங்கிரஸ் இப்போது தெரிவிக்கிறது. தாக்குதல் நடத்தியதை வெளிப்படுத்தி நரேந்திர மோடி அரசைப்போல அரசியல் ஆதாயம் தேடத்தாங்கள் விரும்பவில்லை என்றும், சற்று தாமதமாகத் தெரிவிக்கிறது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வச் செய்திக்குறிப்பு. அதுமட்டுமல்ல, இப்படி நடத்தப்படும் தாக்குதல்களை விளம்பரப்படுத்தினால் அது பாகிஸ்தானை மேலும் எரிச்சலூட்டி, அந்த நாட்டுடன் சமாதானம் பேசுவதற்கு முட்டுக் கட்டையாக மாறிவிடும் என்பதால் தங்களது அரசு மெளனம் காத்ததாகக் கூறுகிறது காங்கிரஸ்.
தாங்கள் ஆட்சியில் இருந்த போது தாக்குதல் நடத்தியது குறித்து ஏன் வெளிப்படுத்த வில்லை என்பதற்கு காங்கிரஸ் கூறும் காரணங்கள்,

இப்போது தாக்குதல் குறித்த ஆதாரங்களை அரசு வெளிப்படுத் தாததற்கும் பொருந்தும் என்பது காங்கிரஸுக்குத் தெரியாதா, இல்லை அரசியல் ஆதாயத்துக்காக தெரியாததுபோல நடிக்கிறதா? இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய, இந்திய ஜனநாயகத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலாக வழி நடத்திய காங்கிரஸ், அரசின் ராஜதந்திர நடவடிக்கையை விமர்சிப்பது என்பது அதன் தலைமை எந்தளவுக்குத் தரம் தாழ்ந்து விட்டது என்பதைத்தான் காட்டுகிறது.


காங்கிரஸ்தான் இப்படி என்றால், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலும், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியும்கூட அரசு விடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று அறிக்கை விடுத்து, பாகிஸ்தானிய தொலைக்காட்சி நேயர்களை மகிழ்விக்கும் அவலத்தை என்னவென்று சொல்ல? இப்படி இந்தியாவுக்குள்ளேயே எதிர்ப்புக்குரல் எழுவதைத்தானே பாகிஸ்தான் விரும்பும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.