தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் 3 தொகுதி இடைத்தேர்தலிலும் மாற்றத்தை கொண்டுவர மக்கள் வழிவகை செய்யவேண்டும்.

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படுவது உலக சாதனையாக பேசப்படுகிறது. ஆனால் அது நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அரசு அனுமதியுடன் கட்டப்பட்டது.

தமிழகத்தில் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. முதியோர்களுக்கு சிறப்புபாதுகாப்பு திட்டம் என்று கொண்டு வந்தார்கள். அது சரியாக நடைமுறைப் படுத்தவில்லை.

முதியோர்கள் பாதுகாப்புக்கு சிறப்புதொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது. அதனை ஒரே நாளில் முதியோர்கள் படித்து தெரிந்துகொள்ள முடியாது. எனவே அந்த தொலைபேசி எண்ணை டி.வி., வானொலி, பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களை உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகமாக முன்னேற்ற முயற்சி எடுத்துவருகிறது. ஆனால் டாக்டர் ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

நாட்டை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

தொழில் துறை முதலீட்டில் தமிழகம் 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இது விவசாயிகளுக்கு ஏற்ற சூழல் அல்ல. தொழில்துறை முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும் ஏற்ற சூழ்நிலைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு மழையினால் சென்னை கடுமையாக பாதிக்கப் பட்டது. இந்த ஆண்டும் மழை பாதிப்பை தடுக்க அரசும், மாநகராட்சியும் தீவிரநடவடிக்கை எடுக்கவில்லை. ஆண்டவன் நம்மை காப்பாற்றவில்லை. இனி ஆண்டவன்தான் நம்மை காப்பாற்றவேண்டும். நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு தி.மு.க.வும் காரணம்.

தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தீவிரநடவடிக்கை எடுத்துள்ளது. பா.ஜனதா மத்தியில் பொறுப்பேற்ற பிறகு 4-ம் கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தமிழக மீனவர்களின் நலன்காக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.