பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.


"பஞ்சாபி சுபா'-வின் 50-ஆவது ஆண்டு விழாவை யொட்டி அமிருத சரஸில் நடைபெற்ற நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. ஒன்றுபட்ட சண்டீகரிலிருந்து சீக்கிய ஹிந்துக்கள் அதிகம்வாழும் பஞ்சாப் பகுதி தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதன் நினைவாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.


இந்தவிழாவில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:இந்திய எல்லைப் பகுதிகளில் எந்த நாட்டு ராணுவத்தினர் வேண்டுமானாலும் அத்துமீறி நுழையலாம்; தாக்குதல்நடத்தலாம் என்றொரு காலம் முன்பு இருந்தது. அது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலம். நேரு குடும்பம் ஆட்சி அரியணையில் அமர்ந்திருந்த காலம்.


ஆனால், தற்போது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்திய எல்லையில் அத்து மீறினால் அதற்கு இரு மடங்கு விலை கொடுக்க வேண்டியிருக்குமே என எதிரிநாடுகள் அஞ்சுகின்றன. அதையும் மீறி, நமது எல்லையில் எந்தநாடேனும் அத்துமீறலை அரங்கேற்றினால், அந்த நாட்டுக்கே சென்று நமது ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் நாட்டுமக்களின் நலனில் பிரதமர் மோடி சமரசம் செய்துகொள்ள மாட்டார்.


நாடு சுதந்திரமடைந்த பிறகு விவசாயிகளின் நலனுக்காகவும், ஏழைகள், தலித்மக்களின் நலனுக்காகவும் அதிகம் பாடுபடுவது பிரதமர் மோடி தலைமையிலான அரசுமட்டுமே. ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. திட்டங்களைக் கொண்டு வருவதுடன் மட்டுமல்லாமல் அவை முறையாக மக்களை சென்றடைகிறதா என்பதும் தற்போது உறுதிசெய்யப்படுகிறது. பஞ்சாபை பொருத்தவரை, அகாலி தளம் – பாஜக கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளும் முன்னேறியுள்ளன. இந்தவளர்ச்சி தொடர வேண்டுமானால், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அகாலி தளம் – பாஜக கூட்டணிக்கு நீங்கள் (மக்கள்) ஆதரவளிக்க வேண்டும்.


பஞ்சாப் மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் அமித் ஷா.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.