நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என எடுக்கப்பட்ட முடிவு, நேர்மையான ஒரு பிரதமரால், துணிச்சலாக எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த முடிவு பதுக்கலுக்கும், கள்ள நோட்டுக்கும், லஞ்சத்திற்கும், மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஒரு முடிவு கட்டும் முடிவாகவே இருக்கிறது.

 

எப்படி இன்றைய தினம் 1000 ரூபாய் செல்லாமல் போய் 100 ரூபாய் மதிப்பு பெற்றிருக்கிறதோ, அதைப்போல் இனிமேல் பதுக்கலாலும், முறையற்ற முயற்சிகளாலும் செல்வந்தர்களாக ஆனவர்கள், இன்று வலுவிழந்து போவதற்கும், நேர்மையாக பணம் ஈட்டியவர்கள் வலிமை பெறுவதற்கான சீரிய முயற்சி இது.

 

நம் பாரதப் பிரதமர், அனைவருக்கும் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, சிகிச்சை போன்றவை சமமாக கிடைப்பதற்கே இந்த நடவடிக்கை  என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் இது அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும், சாமானியருக்கும் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்கான முயற்சி. நான் ஏன் இதை குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், ஏதோ இந்த முயற்சி அடித்தட்டு மக்களை பாதிக்கும் ஒரு நடவடிக்கை என்பதைப் போல முன்னிறுத்தப்படுகிறது. பொது மக்கள் யாரும் பதட்டமோ, அச்சமோ கொள்ளத் தேவை இல்லை.

நம் கையில் இருக்கும் பணம், அதே மதிப்பில் நமக்குத் திரும்பக் கிடைக்கும். சில பேர் 500, 1000 செல்லாது என்றவுடன் ஏதோ அது தூக்கி எறிய வேண்டியது போல் பேசுகிறார்கள். அப்படி அல்ல. அதே மதிப்பில் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியும். எவ்வளவு பணம் இருந்தாலும் வங்கியில் செலுத்தலாம். இதற்கு 50 நாட்கள் அவகாசம் உண்டு. ஆக கணக்கிலடங்கா பணம் கணக்கிற்குள் வந்து கணக்கு காட்டப்படும் கட்டாயத்திற்கு வருவது கவனிக்கத்தக்கது. இன்று ஒரு நாள் மட்டும் சின்ன சின்ன பிரச்சனைகளை, சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கலாம் என்பது உண்மை. ஆனால் இது நெடு நாளைய பிரச்சனைகளுக்கும், சிக்கல்களுக்கும் தீர்வு ஏற்படுத்தும் என்பதால் நாம் அனைவருமே மகிழ்ச்சியடைய வேண்டியது அவசியம்.

திருமணம், சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் சில பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். ஆனால் திருமணம் தாண்டி, நம் வருங்கால சந்ததியினர் சுகமாக வாழவே இந்த நடவடிக்கை என்பதை மக்கள் இப்போது புரிந்திருக்கிறார்கள். நாளை மிகப் பெரிய நோய் தாக்காமல் இருக்க இன்று போடப்படும் தடுப்பூசியாக இந்த நடவடிக்கையை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று சிறிய வலியை ஏற்படுத்தினாலும், நாளைய ஆரோக்கியத்திற்கானது என்றே மக்கள் இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

 

       இப்படிக்கு
                                   என்றும் மக்கள் பணியில்
                                            
                                 (டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.