ஒரே இரவில் அதிரடியாக ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது மட்டுமல்ல, இந்த அதிரடி அறிவிப்பு பற்றிய ரகசியம் சிறிதளவு கூட வெளியே கசியாமல் இருக்க மோடி வகுத்த வியூகங்கள், அதை அவர் நடைமுறைப்படுத்தியது பிரமிக்க வைத்துள்ளது.

மொபைல் போனுக்கு தடை :

 

அமைச்சரவை கூட்டத்திற்கு வரும் போது யாரும் மொபைல் போன்களை எடுத்து வரக்கூடாது என கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து அமைச்சக அலுவலகங்களுக்கும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு சென்றது. இந்த உத்தரவு நவம்பர் 8 ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் தொடர்ந்தது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும், தான் சொல்லும் வரை யாரும் டில்லியை விட்டு செல்ல கூடாது எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள விஷயங்கள் குறித்து சில தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஆனால் ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெற உள்ளதாக எடுக்கப்பட்ட முடிவு பற்றி ஒரு வார்த்தை கூட வெளியிடப்படவில்லை.

அதிர்ந்து போன அமைச்சர்கள் :

 

அமைச்சரவை கூட்டம் துவங்கியதும் மோடி விவரித்த முதலாவது அம்சமாக ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவது பற்றி தான் பேசி உள்ளார். கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு வரை அமைச்சர்கள் யாருக்கும் ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பற்றி எதுவும் தெரியாது என கூறப்படுகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் பற்றிய விரிவாக விளக்கம் பிறகு அமைச்சரவை சகாக்களிடம் சிரித்தபடி பேசிய மோடி, இதற்காக தான் உங்கள் அனைவரையும் கட்டாயம் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கூறினேன். ரகசியங்கள் வெளியே கசிந்து விடக் கூடாது என்பதற்காக தான் மொபைல் போன்களுக்கும் தடை போட்டேன் என கூறி உள்ளார். கடந்த 3 மாதங்களில் குறைந்தது 4 முறையாவது, சார்ட்டட் அக்கவுன்டன்ட்களை அழைத்து, கறுப்பு பணம் பற்றி பிரதமர் பேசி இருப்பார். கறுப்பு பணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கூறி இருந்தார். அதற்கான உள்ளர்த்தம் இப்போது தான் புரிகிறது என மூத்த அமைச்சர் ஒருவர் கூறி உள்ளார்.

அதிகாரிகளுக்கே தெரியாத தகவல் :

 

அமைச்சரவை கூட்டம் முடிந்த கையோடு, நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அழைத்து 20 முதல் 25 நிமிடங்கள் மோடி பேசி உள்ளார். தொடர்ந்து நாட்டு மக்களுக்கு மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது, மத்திய அமைச்சர்கள் பலர் அமைச்சரவை கூட்ட அறையில் இருந்து தான் அதனை கேட்டுள்ளனர். பிரதமர் உரையாற்றும் வரை ரூபாய் நோட்டு வாபஸ் பற்றி வங்கி அதிகாரிகளுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மோடி விரிவாக விளக்கியதை அடுத்தே வங்கி கிளைகள், ஏடிஎம்.,க்கள் மூடப்பட்டுள்ளன.

பதுக்கல் முதலைகளுக்கு 'செக்' :

 

வங்கி தலைவர்களுக்கோ அல்லது மற்ற அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவித்தால் விஷயம் வெளியே கசிந்து விடும். சிறிது அவகாசம் கொடுத்தால் கூட, அதனை பயன்படுத்தி கறுப்பு பணம் வைத்திருப்போர் அதனை வெள்ளையாக மாற்றி விடுவார்கள் என்பதற்காக தான் நீண்ட ஆலோசனை மற்றும் திட்டமிட்டு நடத்தப்பட்ட நடவடிக்கைகள், கால தாமதமின்றி செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கறுப்பு பணம் வைத்திருப்போர், அதனை ஒப்படைக்கவும், வெள்ளையாக மாற்றிக் கொள்ளவும் போதிய அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது. அதனை பயன்படுத்த தவறியவர்களுக்கு இனி அவகாசம் அளிக்கக் கூடாது என பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக, கண்டிப்புடன் கூறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

நன்றி தினமலர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.