ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மக்கள் மாற்றுவதில் உள்ள சிரமங்களைமட்டும் ஒளிபரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வேதனைதெரிவித்தார்.

ஊடகங்களின் பொருளாதார ஆசிரியர்கள் மாநாடு டெல்லியில் நேற்று 2-வது நாளாக நடந்தது. இதில் கலந்துகொண்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை மந்திரி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

நாட்டின் பொருளாதார நலனை கருத்தில்கொண்டு கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் நாட்டில் எதுவும் முடங்கி போய்விட வில்லை. பஸ்கள், மெட்ரோ ரெயில்கள் உள்ளிட்ட அனைத்தும் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. கருப்பு பணம் மட்டுமே முடக்கப்பட்டுள்ளது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம். ஆனால் கருப்புபணத்தை ஒழிக்கும் வகையில் பிரதமர் மேற்கொண்ட முடிவு சரித்திரம்படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதில் பிரதமர் தன்னிச்சையாக எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை.

செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் படும்சிரமங்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதில் தவறு இல்லை. அதேசமயம் சிரமங்களை மட்டும் காட்டுவது நல்லதல்ல. வரலாற்று சிறப்புமிக்க இந்தநடவடிக்கை சில சுயநலவாதிகளை தவிர மற்ற அனைவராலும் பாராட்டப் படுகிறது.

கருப்பு பணத்துக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பெரும் போர்தொடுத்து இருக்கிறார். சீர்திருத்தம், திறமையாக செயல்படுதல், மாற்றத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3 மூல மந்திரங்களை நமக்கு அளித்துள்ளார். உடல், மனம், பணம் இந்த மூன்றிலும் அனைவரும் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மிகவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. வெளிநாட்டு முதலீடும், அன்னியசெலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் பொது மக்களை சென்றடைவதற்காகதான் இந்த கருப்புபண ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். உங்கள்கையில் உள்ளது நல்லபணமாக இருந்தால் அது செல்லும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், கணக்கில் உள்ள பணத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. விவசாய வருமானத்திற்கு வரி எதுவும்இல்லை.

புதிய ரூபாய் நோட்டில் காந்தியின் கண்ணாடி உள்ளது. அந்தகண்ணாடி கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறது.

டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9, 10-ந் தேதிகளில் அனைத்து மாநில தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை மந்திரிகளின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார். 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.