தமிழகத்தில் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. எப்போதும் போல ஆளும்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு எனது நன்றியையும், தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பிரச்சாரத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்று தொகுதிகளிலும் நாங்கள் எதிர்பார்த்த வாக்குகள் இல்லை என்றாலும், மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறோம். ஒவ்வொரு வாக்கும் மணி மணியான வாக்கு. “MONEY” இல்லாத வாக்கு, நாங்கள் பெற்ற அத்தனையும் உண்மையாக பெற்ற வாக்குகளே தவிர, வாங்கிய வாக்கு கிடையாது. அது மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் அங்கீகாரம் ஆரம்பித்து விட்டது என்பதை ஆரவாரம் இல்லாமல் சொல்லும் வாக்கு. இந்த இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை என்ற நிலையிலும், தேர்தல் முறையாக நடைபெறாது என்ற காரணங்களுக்காக பல கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கும் முடிவு எடுத்தாலும், களங்கங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமென்றால் களத்தில் இருந்தே ஆக வேண்டும் என்ற உறுதியான முடிவை எடுப்பதற்கு உறுதுணையாக நின்றனர் அத்தனை பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர்களும். ஆக இந்த களத்தை எதிர்கொண்டு இன்று சிறிய அளவிலாவது மக்களிடம் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இன்று பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழக அரசியலில் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது என்பதும், மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மீது நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது என்பதையும் இந்த தேர்தல் உணர்த்துகிறது.


ஆக இன்று தளராமல் தளிர்நடை போடும் பாரதிய ஜனதா கட்சி நாளை தடைகளை தகர்த்து, தடம் பதிக்கும் நிலை தமிழகத்தில் உருவாகும் என்பது உறுதி. ஆக தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவாக பாரதிய ஜனதா கட்சிக்கு தகுதி இருக்கிறது என்பதையே இத்தொகுதி நிலவரங்கள் உணர்த்தியிருக்கின்றன. வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கு எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் மக்கள் பணியில்

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

பாஜக மாநில தலைவர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.