பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டுவருவதால் மிகுந்த வேதனை அடைந்துள்ள பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என எண்ணுவதாக கூறியுள்ளார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்தமாதம் 16-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே ரூபாய் நோட்டு பிரச்சினையை எழுப்பி, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை முடிவடையும் நிலையில், சொல்லிக்கொள்ளும்படியான எந்த அலுவலும் இதுவரை நடைபெறவில்லை.

பாராளுமன்றம் தினந்தோறும் ஒத்திவைக்கப் படுவது பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.பி.யுமான எல்.கே.அத்வானிக்கு மிகுந் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றத்தை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்றும்அறிவித்தார். இதனால் மிகுந்த வேதனை அடைந்த அத்வானி, சபையில் இருந்து எழுந்து செல்லாமல் தனது இருக்கையிலேயே அமர்ந்துஇருந்தார்.

அப்போது அங்கு வந்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தனது வேதனையை பகிர்ந்தார். உடனே இரானி அருகில் நின்றுகொண்டிருந்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் இதைதெரிவித்தார். உடனே அவர் சில எம்.பி.க்களுடன் அத்வானிக்கு அருகில்வந்து அவரது மனக்குறையை அமைதியாக கேட்டுக் கொண்டார்.

அவரிடம் பேசிய அத்வானி, ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து நாளைக்காவது (இன்று) விவாதம் நடத்துவதை உறுதிசெய்யுமாறு சபாநாயகரிடம் எடுத்துரைக்க கூறினார்.

அவ்வாறு நடக்கவில்லை என்றால், கூட்டத்தொடர் முற்றிலும் பயனற்று (வாஷ்அவுட்) போனதாக கருதப்படும் என்றும் தனது மனக் குறையை தெரிவித்தார்.

எந்த விதியின் கீழாவது ரூபாய் நோட்டு பிரச்சினையை விவாதிக்கவேண்டும் என்று வலியுறுத்திய அத்வானி, இதில் யாரும் தங்கள்தரப்பு வெற்றி பெற்றதாகவோ அல்லது தோல்வியடைந்ததாகவோ கருதவேண்டாம் என்றும் கூறினார். கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்படுவது பாராளுமன்றத்தின் தோல்வியாகவே கருதப்படும் எனவும் அத்வானி வேதனைதெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.