இந்தியா – தஜிகிஸ்தான் இடையே நிதிசார் புலனாய்வு தகவல்கள் பரிமாற்றம் உள்பட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


அரசு முறைப் பயணமாக தஜிகிஸ்தான் அதிபர் எமாமலி ரஹ்மான் இந்தியாவந்துள்ளார். தில்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சனிக் கிழமை காலை அவருக்கு இந்திய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து, பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் எமாமலி ரஹ்மான் சந்தித்து பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியவிவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து இருநாடுகள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாத அச்சுறுத்தல்களையும், சவால்களையும் சமஅளவில் சந்திக்கும் நாடுகளாக இந்தியாவும், தஜிகிஸ்தானும் விளங்குகின்றன. பயங்கர வாதத்தால் இந்த இருநாடுகள் மட்டும் பாதிக்கப் படவில்லை. மாறாக, ஒட்டுமொத்த ஆசிய பிராந்தியமே பாதிக்கப்பட்டிருக்கிறது.


எனவே, பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை எதிர்ப்பது என்ற தீர்க்கமான முடிவினை இந்தியாவும், தஜிகிஸ்தானும் எடுத்துள்ளன. மேலும், பயங்கர வாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பை நல்குவது என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேசமயத்தில், சர்வதேச பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விரைந்து ஏற்றுக் கொள்ளவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் பிரதமர் நரேந்திரமோடியும், தஜிகிஸ்தான் அதிபர் எமாமலி ரஹ்மானும் கையெழுத்திட்டனர். வரிஏய்ப்பு, கருப்புப் பண பதுக்கல், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும்வகையில் தஜிகிஸ்தானும், இந்தியாவும் நிதிசார் பொருளாதாரத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கையழுத்திடப்பட்டது.


மேலும், திருத்தியமைக்கப்பட்ட இரட்டைவரி விதிப்பு மற்றும் நிதி மோசடி தவிர்ப்பு ஒப்பந்தமும், இரு நாடுகளுக்கிடையேயான கலாசாரத்தொடர்புகளை வலுபடுத்தும் வகையிலான ஒலி/ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகின.

Leave a Reply