ஊழியர்களுக்கு தொழில்நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னணுபரிமாற்ற முறையில் வழங்க அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து, ரொக்கபணமில்லா மின்னணு பரிமாற்ற முறையை அனைத்து தரப்பினரும் பயன் படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில், தொழில் நிறுவனங்கள், தங்களது தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் அவர்களது மாதசம்பளத்தை காசோலையாகவோ, மின்னணு முறையிலோ வழங்குவதற்கு வகைசெய்து, அவசர சட்டம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்தவட்டாரங்கள் கூறுகையில், “சம்பள பட்டுவாடா சட்டம் 1936-ல் அவசரசட்டம் வாயிலாக திருத்தம்செய்ய மத்திய மந்திரி சபை ஒப்புதலை வழங்கியது. இது, குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களின் அதிபர்கள், தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளத்தை மின்னணுமுறையில் அல்லது காசோலை மூலம் வழங்க வகைசெய்கிறது” என தெரிவித்தன.

சம்பள பட்டுவாடா சட்டம் பிரிவு 6-ஐ திருத்த வகைசெய்து பாராளுமன்றத்தில் நடந்துமுடிந்த குளிர்கால கூட்டத் தொடரின்போது சம்பள பட்டுவாடா சட்டம் (திருத்தம்) மசோதா, 2016-ஐ பாராளுமன்றத்தில் கடும்அமளிக்கு இடையே மத்தியதொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

சம்பள பட்டுவாடா சட்டம் 1936, சம்பளத்தை நாணய மாகவோ, ரூபாய் நோட்டுகளாகவோ வழங்க வகை செய்துள்ளது. இப்போது ரூபாய்நோட்டுகளாக வழங்காமல் காசோலையாகவோ, மின்னணு முறையிலோ வழங்குவதற்காகத்தான் அந்தசட்டத்தை திருத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது.

பின்னர் முறைப்படி, இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிடும்.

இதன்மூலம் நிறுவனங்களின் அதிபர்கள், தங்கள் ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சம்பளத்தை இனி காசோலை மூலமோ, வங்கிவழி மின்னணு பரிமாற்றம் மூலமோ வழங்கும்.இது பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறபடி, ரொக்கமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைசெய்யும். 

Leave a Reply