அக்னி-5 ஏவுகணை சோதனையை விஞ்ஞானிகள் திங்கள் கிழமை வெற்றிகரமாக நடத்தினர். இந்த ஏவுகணை, 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான தொலைவில் இருக்கும் எதிரிகளின் இலக்கைத்தாக்கும் வல்லமையுடையது.


இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது:


இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஏவுகணைகள் உள்ளிட்ட நவீனஆயுதங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து சோதனை நடத்திவருகிறது. இதில், டிஆர்டிஓ தயாரித்து அளித்துள்ள அக்னி-1 (700 கிலோ மீட்டர் தூரம்), அக்னி-2 (2,000 கிலோ மீட்டர்), அக்னி-3 (2,500 கி மீட்டர் தூரம்), அக்னி-4 (3,500 கிமீட்டர்) ஆகிய ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவிட்டன.


இந்நிலையில், கண்டம்விட்டு கண்டம்பாய்ந்து சென்று 5 ஆயிரம் கி.மீட்டர் தொலைவில் இருக்கும் எதிரிகளின் இலக்கைத் தாக்கியழிக்கும் அக்னி- 5 ஏவுகணையை டிஆர்டிஓ அமைப்பு தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை, கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல்மாதம் 19-ம் தேதி முதல் முறையாக ஏவப்பட்டு சோதிக்கப் பட்டது. அதையடுத்து, 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆவது முறையாகவும், 2015-ம் ஆண்டு ஜனவரிமாதம் 3-ஆவது முறையாகவும் சோதிக்கப்பட்டது.


இதையடுத்து, அக்னி-5 ஏவுகணை 4-ஆவது முறையாக திங்கள் கிழமை மீண்டும் சோதிக்கப்பட்டது. ஒடிஸா மாநிலம், அப்துல்கலாம் தீவில் இருந்து திங்கள்கிழமை காலை 11.05 மணிக்கு மொபைல் லாஞ்சர் மூலம் அக்னி-5 ஏவுகணை செலுத்தப் பட்டது. இந்த ஏவுகணை செல்லும்வேகம், தாக்கி அழிக்கும் துல்லியம் உள்ளிட்டவற்றை ஏவுகணை பறந்துசெல்லும் வழியில் நிறுத்தப்பட்ட கப்பல்களில் பொருத்தப் பட்டிருந்த கருவிகள் மூலம் விஞ்ஞானிகள் கண்காணித்தனர். அதன்படி, அக்னி-5 ஏவுகணை தனது தாக்குதல் இலக்கைத் துல்லியமாகத்தாக்கி அழித்தது.


அக்னி-5 ஏவுகணையானது, 17.5 மீட்டர் நீளமும், 50 டன் எடையும்கொண்டது. தரையில் இருந்து பாய்ந்துசென்று மற்றொரு இடத்தில் இருக்கும் இலக்கைத் தாக்கும் வகையில் ஏவுகணை வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏவுகணையில் துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்க வகைசெய்யும் நவீன மேம்படுத்தப்பட்ட மைக்ரோ நேவிகேஷன் கருவி, ஏவுகணை செல்லும் திசையை தீர்மானிக்கக்கூடிய நவீன கணினி உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டுள்ளன என்று இந்திய பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.அக்னி-5 ஏவுகணையால், சீனாவின் எந்தப் பகுதியையும் தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்; இதன்மூலம், இந்திய ராணுவத்தையும், அதன் தாக்குதல் திறன்களையும் அதிகரித்துள்ளது.

Leave a Reply