ராம்மோகன்ராவ் தான் ஒர் குற்றவாளி என்பதை தெள்ளத்தெளிவாக இன்று தொலைக்காட்சி பேட்டி மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.  யாரும் சட்டத்திற்கு மேல் கிடையாது. எந்த சட்டம் இவர் தலைமைச் செயலாளர் ஆக உதவியதோ, அதே சட்டத்தை இவர் உதாசீனப் படுத்தியிருக்கிறார்.


முதன் முதலில் மம்தாபானர்ஜிக்கும், ராகுல்காந்திக்கும், தூக்கத்திலிருந்து விழித்து திடீர் என்று அறிக்கை கொடுத்திருக்கும் S.R பாலசுப்பிரமணியத்திற்கும், தீரனுக்கும் நன்றி தெரிவித்து பேட்டியை ஆரம்பத்திலிருந்தே அவர் உள்நோக்கம் தெரிகிறது.   அப்பட்டமாகவே அரசியல் செய்கிறார் என்பது மட்டும் புரிகிறது.  எந்த அரசியல் அமைப்பு சட்டத்தை குறிப்பிடுகிறாரோ, அதே அரசியல் அமைப்பு சட்டத்தை அவர் உதாசீனப்படுத்தியிருக்கிறார்.  முதல்வரையும், கவர்னரையும் சவால் விடுகிறாரா இவர்.  இவரின் நடவடிக்கையின் மூலம் காத்திருப்போர் பட்டியலிலிருந்து விடுவிப்போர் பட்டியலுக்கு இவரை எடுத்துச் செல்ல வேண்டுமென முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை வேண்டுகிறேன்.  அதுமட்டுமல்ல தலைமைச் செயலகத்து சோதனையை முதல்வரும் எதிர்க்கவில்லை. எதிர்கட்சித்தலைவரும் எதிர்க்கவில்லை.  மம்தா பேனர்ஜி எதிர்ப்பது மட்டும் மாநில உரிமையைப் பாதுகாப்பதா?


மாநில மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்வதற்கு இவர் யார்?  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர் இருக்கும் போது இவருக்கு என்ன அக்கறை?. மத்திய ராணுவம் வந்தது தவறு என்கிறார் குற்றம் சாட்டப்பட்டு, தலைமைச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு இப்படி அசட்டுத் துணிச்சலை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால் காவல் துறையை நிர்வாகித்து வரும் இவர் எப்படி சோதனைக்கு அனுமதித்திருப்பார்?  அதனால் மத்திய இராணுவம் வந்ததில் எந்தத் தவறும் இல்லை?


அது மட்டுமல்ல, தன் வீட்டில் கிடைத்திருப்பதை பட்டியலிடுகிறார் அப்படி என்றால் வருமான வரித்துறை சம்மன் அனுப்பிய போது அதை அங்கு சென்று அதை சொல்லியிருக்கலாமே? வருமான வரித்துறை சம்மன் அனுப்பிய போது அதைத் தவிர்த்து மருத்துவமனைக்கு சென்றது ஏன்?


வருமான வரித்துறை முன்பு பட்டியலை சமர்பித்திருக்கலாமே.  அது மட்டுமல்ல, தன் மகன் பெயர் தான் சோதனை செய்யப்படுவோர் பட்டியலில் இருந்தது தனது பெயர் இல்லை என்கிறார்.  ஆனால் வருமானவரித்துறையின் சட்டப்படி யார் பெயர் இருந்தாலும், அவருக்குத் தொடர்பானவர்கள் யாராக இருந்தாலும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடமும் சோதனை நடத்தலாம் என்பது  அனைவருக்கும் தெரிந்த வழிமுறை விதிமுறை.


மறைந்த முன்னாள் முதல்வரால் நியமிக்கப்பட்டவர் என்கிறார்.  7 மாதம் அவர் என்னைக் கண்காணித்திருக்கிறார் என்கிறார்.  சுமார் 2 ½ மாதம் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்திருக்கிறார்.  தலைமைச் செயலாளராக இவரின் பணியை அனுமானிக்க முன்னாள் முதல்வர் அவர்களுக்கு கால அவகாசம் இல்லை என்பதே உண்மை.  அதுமட்டுமல்ல அவரின் அடியொற்றியே நான் செயலாற்றுகிறேன் என்று சொல்வது முதல்வரையே அவமதிப்பதாகும்.

தனது உயிருக்குப் பாதுகாப்பில்லை என்கிறாரே அவரின் இதயத்தால் பாதுகாப்பில்லையா?  அதனால் தான் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாரா? அப்படி என்றால் இரண்டு நாட்களில் சிகிச்சை முடிந்து இவ்வளவு தைரியமாக பேசும் பலம் எங்கிருந்து வந்தது? யாரால் வந்தது? எப்படி வந்தது?
அதோடு ஆணவத்தோடு சொல்கிறார்  இன்னும் தான் தான் தலைமைச்  செயலர் என்று. ஆக விதிமுறைகளையும், வழிமுறைகளையும் அப்பட்டமாக மீறி இருக்கிறார்.  அவர் மீது முழுமையான விசாரனை நடைபெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


மொத்தத்தில் தமிழகத்தில் உள்ள அமைதியான சூழல் கெடும் அளவிற்கு அவரின் பேச்சு உள்ளது மட்டுமல்ல,  ஓர் தவறான நடவடிக்கையின் மூலம் ஓர்  தவறான முன்னுதாரணமாக அவர் திகழ்கிறார் என்பதே உண்மை.
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற பொறுமை கூட ஓர் அதிகாரிக்கு இல்லாதது வியப்பே.
                              

  என்றும் மக்கள்;; பணியில்                                                                                                                           
                                                                            (Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

பாஜக மாநில தலைவர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.