கிராமப்புறங்களில் வசிப்போருக்கும், ஏழைமக்களுக்கும் நலன்களை அளிக்கும் வகையிலான பிரதமர் நரேந்திர மோடியின் எந்த ஓர் அறிவிப்பையும் எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்கமுடியாமல் எதிர்க்கும் மனநிலையிலேயே உள்ளன என்று மத்திய அமைச்சர்கள் கடுமையாக சாடினர்.


புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பேசினார். அப்போது விவசாயக்கடன் மற்றும் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி, மூத்த குடிமக்களின் சேமிப்புத்தொகைக்கு 8 சதவீத வட்டி, கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அவர் அதிரடியாக அறிவித்தார்.


இந்தச் சலுகைத் திட்டங்களை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்காமல் தற்போது அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பின. ஏழைகளுக்கான திட்டங்கள்: எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பிரதமர் நரேந்திரமோடி சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்புகளானது, நாட்டு வளர்ச்சிக்காகவும், மக்கள் நலன்களுக் காகவும் ஆகும். இதனால் ஏழைமக்கள், விவசாயிகள், கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பயன்கிடைக்கும்.


சமூகத்தில் நலிவடைந் தோருக்கும், ஏழைகளின் நலன்களுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பணியாற்றுகிறது என்பதை பிரதமர் மீண்டும் ஒரு முறை புரியவைத்து விட்டார்.அவரது தலைமை மற்றும் தொலை நோக்குப் பார்வையால் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்கிறார் என்று அந்த அறிக்கையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்க்கும் மனநிலை…: இதைத் தொடர்ந்து, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


கருப்புப் பணம் வைத்திருப்போர் தொடர்பான புள்ளிவிவரங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவுடன், காங்கிரஸ் கட்சியின் பாவங்களின் எண்ணிக்கை மதிப்பிடப்படும். வறியவர்களுக்கான நலத்திட்டங்களை புத்தாண்டுப் பரிசாக பிரதமர் மோடி அறிவித்தவுடன் காங்கிரஸ் கட்சியினரும், அவர்களது சிலநண்பர்களும் வழக்கம்போல் எதிர்க்கும் மனநிலையில் உள்ளனர்.


அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்தியஅரசு அறிவித்தவுடன், பொதுமக்கள் பல்வேறு இன்னலுக் குள்ளாவதாக காங்கிரஸ் கட்சியினரும், அவர்களது நண்பர்களும் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
மூத்த குடிமக்கள், ஏழைகள், சிறுவணிகர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு நன்மைகளை அளிக்கும் திட்டங்களை பிரதமர் அறிவித்ததால் காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும்வரை திட்டங்களை அறிவிக்காமல் மோடி காத்திருந்திருக்கலாமே என்று காங்கிரஸ் எதற்காக கேள்வி எழுப்புகிறது? அவையை மீண்டும் முடக்குவதற்காகவா?: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது அவையை செயல்படவிடாமல் முடக்கியதை போல், பட்ஜெட் கூட்டத்தொடரையும் முடக்கி, நலிந்த மக்களுக்கு நலத்திட்டங்கள் மூலம் பிரதமர் உதவுவதைத் தடுப்பதற்காகவா?
வரும் 2022-இல் அனைவருக்கும் கனவு இல்லம் என்றதிட்டம் நனவாக, வீட்டுக்கடன்கள் மீதான குறைந்த வட்டி விகித அறிவிப்புகள் கைகொடுக்கும்.


ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையானது ஊழல் மற்றும் கருப்புப்பணத்துக்கு எதிராக வழங்கப்பட்ட திறமையான தடுப்பு மருந்தாகும். புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக ராகுல்காந்தி லண்டன் சென்றிருப்பது, பொதுமக்களின் பிரச்னைகள் மீது காங்கிரஸ் எத்தகைய அக்கறை கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது.
சஹாரா மற்றும் பிர்லா குழும நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம்வாங்கியதாக பிரதமர் மோடியை விமர்சித்து விட்டு தப்பியோடும் தந்திரத்தை காங்கிரஸ் பின்பற்றுகிறது.சமாஜவாதி கட்சியில் தற்போது நடைபெற்று வரும் குடும்பச் சண்டையானது அப்பட்டமான நாடகம் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.