உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தில், மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றன. இதற்குமுன்பு அக்கட்சிகள், கருப்புப் பண ஒழிப்புக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று கேள்விகள் எழுப்பின. அதேகட்சிகள் தற்போது, இதுபோன்ற முடிவை மத்திய அரசு ஏன் எடுத்தது? என்று கேட்கின்றன.


மத்திய அரசின் முடிவால், தங்களது தவறு வெட்டவெளிச்சமாகி விட்டதால், முந்தைய நிலைப்பாட்டை அக்கட்சிகள் மாற்றிக் கொண்டுவிட்டன. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றிபெறும்.
கேரள மாநிலம், கோழிக் கோட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தலைவர்கள், உரியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்களுக்கு கடும்வேதனை தெரிவித்தனர்.

அந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்துதான், மத்திய அரசு 2 வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுத்தது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக, பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து இந்தியவீரர்கள் துல்லியத் தாக்குதலை (சர்ஜிகல் அட்டாக் நடத்தினர். அப்போது இந்திய ராணுவத்தின் பலத்தை கண்டு ஒட்டுமொத்த உலகமும் பாராட்டியது. சிறந்ததுணிச்சலுக்கு அந்த தாக்குதல் ஓர் எடுத்துக் காட்டாகும்.


பயங்கரவாதத்துக்கு இந்தியா கொடுத்த பதிலே, அந்த சர்ஜிகல் அட்டாக் ஆகும். பயங்கரவாத விவகாரத்தில் சகிப்புத்தன்மை காட்டக் கூடாது என்ற கொள்கை குறித்து பாஜக எப்போதும் பேசி வந்துள்ளது. அதன்படி பாஜக தற்போது செயல்படுகிறது.


இதேபோல், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் தொடர்பான முடிவும் வரலாற்று சிறப்புமிக்கதுதான். நாட்டை வெறுமனே ஆட்சிசெய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் நமது கட்சிக்கு வாக்களிக்கவில்லை. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்; ஏழைகள் விதியை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காகவும்தான் வாக்களித்துள்ளனர்.


ஏழைகள் நலத் திட்டங்களை நாம் தொடங்க வேண்டும், அவர்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதுவே, மத்திய அரசின் முடிவுகளை நாட்டு மக்கள் பாராட்டுவதற்கும், பாஜகவை ஏழைகள் ஆதரிப்பதற்கும் காரணம் ஆகும்.


உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ்விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளும், நாட்டு மக்களிடையே அதிக ஆதரவு இருப்பதாக தெரிவிக்கின்றன. இது எதிர்க் கட்சிகளை கவலையடைய செய்துள்ளது. ரூபாய் நோட்டுகள் தொடர்பான முடிவுக்கு பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில், மொத்தமுள்ள 10 ஆயிரம் இடங்களில் 8 ஆயிரம் இடங்களை பாஜக கைப்பற்றி யுள்ளது.

இதன் மூலம், மத்திய அரசின் முடிவுக்கு தேசியஅளவில் ஆதரவு இருப்பதை புரிந்துகொள்ளலாம். உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ்தொடர்பான நடவடிக்கைக்கு நல்லபலன்களே கிடைத்து வருகின்றன. இந்நடவடிக்கை, வரி ஏய்ப்பை தடுத்து நிறுத்தியுள்ளது. நலத்திட்டங்களுக்கு அதிக நிதியை செலவிடுவதற்கு வழிவகுத்துள்ளது. நாட்டு மக்களுக்கு எது நன்மையைத் தரும் என்று சிந்தித்து பார்த்தே, அந்த முடிவை அரசு எடுத்தது. மக்களின் வேதனையை நாம் அறிவோம். ஆனால், நாட்டுக்கு எது நீண்ட காலத்துக்கு நன்மை தருமோ, அதனால் உடனடியாக சில பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும்.


மத்திய அரசு மீது குற்றம்சுமத்தி வந்த எதிர்க்கட்சிகளின் சாயம் வெளுத்துவிட்டது. இதற்கு முன்பு அக்கட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தற்போது பிரதமர் நரேந்திரமோடிக்கும், பாஜகவுக்கும் மக்கள் அளிக்கின்றனர். அக்கட்சிகளிடம் இருந்த "ஏழைகள் ஆதரவுகட்சிகள்' என்ற அடையாளத்தை பாஜக தற்போது தன்வசம் எடுத்துக் கொண்டுவிட்டது.


மக்களவைக்கும், மாநில சட்ட பேரவைகளுக்கும் ஓரேநேரத்தில் தேர்தல் நடத்துவது உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. இந்தவிவகாரம் குறித்து ஆலோசிப்பதற்கு பாஜக ஒரு குழுவை அமைத்துள்ளது.

தில்லியில் பாஜக தேசியசெயற்குழுவின் 2 நாள் கூட்டத்தை அமித்ஷா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து பேசியது:

 

Leave a Reply