1. மனித வாழ்காலத்தை பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகளாகப் பகுப்பது இந்த மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

2. இக்குலத்தில் பிறந்தோர், அக்குலத்தில் பிறந்தோர் என்று வித்தியாசமின்றி அனைத்து குலத்தவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

3. ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்பாக வரலாம்.

4. வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக்கூடாது.

5. நெருங்கிய உறவினரின் பிறப்பு – இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்தும் பல்லோருடன், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.

6. திங்கள்/ சனிப் பிரதோஷங்கள் மிகு சிறப்பு போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நக்ஷத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு.

7. கடையில் வாங்கும் தேங்காய் எல்லாம், முதற்பார்வைக்கு ஒன்றாகவே தோன்றினாலும், இலங்கையில் விளைந்த (கொழும்பு)த் தேங்காய்க்கும், கேரள மலைச்சாரலில் விளைந்த தேங்காய்க்கும், பொதுவாக, மழை குறைவான, தமிழகத்தில் விளையும் தேங்காய்க்கும், நுண்ணிய வித்தியாசம் இருப்பது போலவே, வெவ்வேறு மாதங்களில், தினங்களில் வரும் ஏகாதசிகளுக்கும் தனித்தன்மைகள் உள்ளன.

8. பொதுவாக, எல்லா வகை மருத்துவமும், அவ்வழி பின்பற்றும் மருத்துவமும் நமக்கு பல்வேறு நோய்களிலிருந்தும் நிவாரணம் அளித்தாலும் ஒவ்வொரு வகை மருத்துவ இயலுக்கும், ஒவ்வொரு மருத்துவருக்கும் தனிச்சிறப்பு உள்ளது. இது போலவே தான் ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், பலன்களும் ஆகும். பயன் குறைவு – கூடுதல் என்பதல்ல. மாறாக ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.

9. ஏழ்மை – நிவாரணம், நோய் எதிர்ப்பு நிலைக் குறைவு – தடுப்பு, தொழுநோய் தவிர்ப்பு, புலியினம் காப்பு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காத்தல் போன்றவற்றுக்கு நம் அன்றாடச் செயல்பாடுகள் பலவும் உதவினாலும் கூட; மேற்குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒன்றை அதிகமாகப் பெறுவதற்காகவே சில தினங்களில் முனைப்புடன் செயல்படுகிறோம். இது போன்ற நிலையையே விரத அனுஷ்டிப்பிலும் காண்கிறோம்.

10. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும், சிகிச்சையின் போதும், அறுவை சிகிச்சைக்குப் பின்பும், நோயாளிக்கு முழுமையான ஆரோக்கிய நிலை ஏற்படுவதற்காக, சில நாட்களுக்கு உணவுக் கட்டுப்பாடும், குறைப்பும், தவிர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இது போலவே தான், ஏகாதசி போன்ற விரதங்களின் போது, விரத உண்ணாமையின் முழுப் பயனை அடையவும், விரத நாளில் முழுவதும் உண்ணாதிருப்பது சிரமமாகத் தோன்றாமல் இருக்கவும், முதல் நாளான தசமியன்று ஒரு வேளை மட்டுமே உண்கிறோம். மேலும், வெகு நேரம் உணவின்றியிருந்ததற்குப் பின்பு, படிப்படியாகவே உணவு அளவைக் கூட்ட வேண்டும் என்பதற்காக துவாதசியிலும் ஒரு வேளை உணவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அன்றைய உணவு அளவு குறைவாயிருந்தாலும் அது எளிதாக ஜீரணிக்கப்பட்டு, அதிக ஊட்டச்சத்தும் அளிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை உபயோகிக்கிறோம்.

11. ஒவ்வொரு ஏகாதசி விரதமும் (எல்லா விரதங்களுமே) குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுவதற்குக் காரணம், துன்பப்படுவோர் நன்மை பெற வேண்டும் என்பது மட்டுமல்ல. அவ்வல்லல்களுக்குக் காரணமாகும் தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும் என்று நினைவுறுத்துவதே, விரத மேன்மை விவரிப்புகளின் நோக்கமாகும்.

12. ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களோ, முனிவர்களோ வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது. ஒரு பள்ளிக்கூடத்தின் வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு மாணவர்களுக்கு ஒரே பாடத்தையே வழிவழியாக கூறிவருகின்றனர். இது போன்றதே ஏகாதசியைப் பற்றிய வரலாறுகளும் ஆகும்.

13. ஏகாதசி விரதத்தன்று, விரிவாக பூஜை செய்வது நல்லதே என்றாலும், பலருக்கும் பசி சோர்வினால் பூஜை செய்வது இயல்வதில்லை. உண்ணாநோன்பே அன்று மிக முக்கியமானதால், இங்கும் அங்கும் ஓடி அதிகச் சோர்வு அடைவதை விட வீட்டிலேயே, மௌனமாக இருந்து, மானஸ பூஜை அல்லது நாமஜபம் செய்வது எளிதாகும். வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல்களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்வதும் நல்லது. பாராயணத்தால் பயன் அடைவதோடு, முறையற்ற செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதால் அல்லல்கள் வராமலும் காக்கப்படுவோம்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.