குஜராத்தில் நடைபெற்று வரும் 8-ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடினார்.


குஜராத் மாநிலம், காந்தி நகரில் 8-ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை செவ்வாய்க் கிழமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்."வைப்ரண்ட் குஜராத்' என்ற பெயரிலான இந்தமாநாட்டை தொடங்கி வைப்பதற்கு முன்பு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வணிக இதழான "ஃபார்ச்சூன்' வெளியிட்ட சிறந்த 500 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளில் பலரையும் பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார்.


கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் அதிபர் பால்ககாமே, செர்பியா பிரதமர் அலெக்சாண்டர் உசிக், ஜப்பான் பொருளாதார அமைச்சர் சிகோ ஹிரோசிகே உள்ளிட்டோரையும் மோடி சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சுட்டுரைப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:


ருவாண்டாவுடன் தடய அறிவியல்துறையில் ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. டென்மார்க் அமைச்சர் லார்ஸ் கிறிஸ்டெய்ன் லில்லி ஹோல்டுடனும் பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


இஸ்ரேலின் வேளாண், ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் உரி ஏரியலுடன் இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.இவர்களைத்தவிர, ஸ்வீடன் கல்வித் துறை அமைச்சர் அன்னா ஏக்ஸ்டோரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷீத் அகமது பின் ஃபஹத், சிஸ்கோ சிஸ்டம் நிறுவனத்தின் தலைவர் ஜான் டி தாமஸ் உள்ளிட்டோரையும் மோடி சந்தித்துப் பேசினார் என்று அந்தப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மோடியின் கையொப்பம் கொண்ட குர்தாக்கள், சட்டைகள் ஆகியவை குஜராத் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டன. "ஜேட் ப்ளூ' என்ற நிறுவனம் குர்தாவிற்பனை அங்காடியை வைத்துள்ளது. இந்த அங்காடி திறந்த சிலமணி நேரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் ஆர்வமுடன் குர்தா, சட்டைகளை வாங்கிச்சென்றனர்.


தாயாரைச் சந்திப்பதற்காக யோகாவைத் தவிர்த்த மோடி


காந்திநகரில் உள்ள தனதுதாயார் ஹீராபென்னைச் சந்திப்பதற்காக செவ்வாய்க் கிழமை அதிகாலை யோகப் பயிற்சியை செய்யாமல் மோடி தவிர்த்தார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டபதிவில், "எனது தாயார் ஹீராபென்னை செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து, அவருடன் காலை உணவைச்சாப்பிட்டேன். அவரைச் சந்திப்பதற்காக யோகப்பயிற்சியைத் தவிர்த்து விட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.


காந்திநகர் அருகே உள்ள ராய்சன் எனும் கிராமத்தில் மோடியின் தாயார் ஹீராபென் (97) இளையமகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.