நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை  மாற்று அறுவை சிகிச்சை அல்லது ஸ்டெம் செல் சிகிச்சை போன்ற அதிக செலவுள்ள சிகிச்சையை  இன்று பலரும் செய்துகொள்ள  வேண்டிய நிலை உள்ளது. இதுபற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது? இந்த ஆபரேஷனனைத்  தவிர்க்க முடியாதா?

 

"விருத்தி:  சமானை : சர்வேஷாம்  விபரீதைர்விபர்யய :" என்கின்றது ஆயுர்வேதம்.அதாவது நம் உடலிலுள்ள  தோஷ, தாது,மலங்கள் ஆகியவற்றுக்குச்  சமமான பொருள்களாலும், குணங்களாலும்,செயல்களாலும்  வளர்ச்சியும்,  அவற்றிற்கு  எதிரானவற்றால்  குறைவும்  ஏற்படுகின்றன  என்று அதற்கு அர்த்தமாகும்.

பொருள்களால் ஏற்படும் வளர்ச்சியைப் பற்றி குறிப்பிடுகையில் இரத்த  அணுக்களின் குறைபாட்டை நீக்க  இரத்தத்தையே  உணவாகவும்,மாமிச குறைபாட்டை மாமிசத்தாலும்,  உடலிலுள்ள சதைக் குறைபாட்டை சதையையே உண்பதாலும் எலும்பின்  வளர்ச்சிக் குறைபாடு நீங்க சிறிய எலும்புகளையே நுண்ணியதாகப்  பொடித்து உண்பதாலும்,எலும்பு மஜ்ஜைக் குறைபாடு நீங்க எலும்பு மஜ்ஜையையே உணவாகவும்,விந்து குறைபாடு நீங்க முதலையின் விந்துவை மருந்தாகவும் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது.  இது எப்படிச்  சாத்தியமாகிறது?

பஞ்சபோவ்திக சித்தாந்தம் பிரகாரம் நம் உடலிலுள்ள இரத்தத்திலுள்ள நீரின் அம்சமும்,வெளியிலிருந்து உள்ளுக்குச் சாப்பிடப்படும் இரத்தத்திலுள்ள நீரின் அம்சமும் ஒரு சேரக் கலப்பதால் அதன் அளவு கூடுகிறது. மாமிச  உணவில் நிலத்தின் அம்சம் அதிகமிருப்பதால்  நம் உடலிலுள்ள மாமிசாம்சத்தின்  நிலத்தின் அளவை அது அதிகரிக்கச்  செய்கிறது. நீராக உள்ள பால், அதுபோலவே உள்ள கபதோஷத்தினை உடலில் அதிகப்படுத்துகிறது.

 பாலில் இருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையை உருக்கி நெய்யாக நாம் அருந்தும் போது விந்துவின்  அளவையும் அதன் செயல்பாட்டையும் முதலையின் விந்துவைப் போல துரிதப்படுகிறது.குளிர்ச்சி நிறைந்த ஜீவந்தி, காகோளீ  போன் மருந்துப் பொருள்களை ஒருவர் சாப்பிடும்போது,  அவர் உடலிலுள்ள குளிர்ச்சியான தாதுக்களின் எண்ணெய்ப்பசையையும், பலமும், உடலின் சாரமான பொருளாகிய ஓஜஸ்ஷும் வளர்ச்சியடைகின்றன. சூடான வீர்யம் கொண்ட உணவுப் பொருள்களாகிய மிளகு, திப்பிலி, சுக்கு  ஆகியவற்றைச் சிறிய அளவில் சாப்பிட்டு வர  அறிவு, ஞாபகச்சக்தி, பசித்  தீ ஆகியவை நல்ல அளவில் வளர்ச்சி பெற்று நமக்கு உதவுகின்றன.

குணங்களின் வாயிலாகவும் நீங்கள் குறிப்பிடும் மஜ்ஜை வளர்ச்சிக் குறைபாட்டை    நாம்  நீக்க முடியும். பலாப்பழம்,  வாழைப்பழம்,  பேரிச்சம்  போன்றவை நிலத்தின் அம்சம்  அதிகம் கொண்டவை.அவற்றிலுள்ள  நெய்ப்பு, கனம் குளிர்ச்சி முதலிய குணங்களால் மஜ்ஜையை நிரப்புவதால், மஜ்ஜை போஷாக்குடன்  வளர்கிறது.

செயல்களை நாம் மூன்று வழிகளால் மட்டுமே செய்ய இயலும். உடல், பேச்சு, மனம் என்னும் அவை  மூலமாகவும் நம் உடல் குறைபாடுகளை நீக்கலாம். நல்ல உறக்கம், நிறையா ஒய்வு  எடுத்தல், சுகமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் விளைவாக 'ஸ்தைர்யம்'  அதாவது நிலைத்தல்  எனும் கபதோஷதின் குணம் வாயிலாக மஜ்ஜை பெறுவதால் அது வளர்கிறது.

மஜ்ஜையை போஷிப்பிக்கும் கபத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைத்தல் ஆகியவற்றை  நாம் உணவாகவும், குணமாகவும்,செயல் மூலமாகவும் பெறும்போது மஜ்ஜையின்  வளர்ச்சியையும் அதன் வழியாக வெள்ளை அணுக்களின் வளர்ச்சியையும் பெறலாம்.ஆனால் இந்தக்  குணங்களை எளிதில் செரிக்கச் செய்து அத்தனை சுலபமாக மஜ்ஜைக்குக்  கொண்டு சேர்ப்பது முடியாது. காரணம் அவற்றிலுள்ள நிலம் மற்றும் நீரின் அம்சம், நம் பசித்தீக்கு அனுகூலமாக இல்லாதிருப்பத்தினால்தான். நெருப்பு, வாயு மற்றும் ஆகாயம் நிறைந்த உணவுப் பொருள்களால் மட்டுமே பசித்தீ  வளரும். பசித்தீ கெடதிருக்கவே நம் முன்னோர் பட்டை, சோம்பு, ஜீரகம், ஓமம், கடுக்கு, பெருங்காயம், மிளகு, தனியா, புளி போன்றவற்றைச்  சரியான விகிதத்தில் உணவில் சேர்த்து கடினமான குணங்களையும்  செரிக்கச் செய்து உடல் பராமரிப்பை பாதுகாத்துக் கொண்டனர்.அதனால் நீங்கள் கூறுவது போல மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு யார் வசப்படுகின்றனர் என்று ஆராய்ந்தால் உணவை நன்கு பாகப்படுத்தி அதனதன் பகுதிக்கு அழைத்துச் செல்ல உதவாத பசித்தீயும், பஞ்ச மஹாபூதங்களுமே என்று நன்கு விளங்கும். சுருக்கமாகச் சொன்னால் நிலம் மற்றும் நீர்பொருள்களை, நெருப்பு என்னும் பசித்தீயில் வேகவைத்து, ஆகாயம் எனும் வெற்றிடங்களின் வழியாக, வாயுவினால் உந்தப்பட்டுச் செல்லும்   'ட்ரான்ஸ்போர்ட்  மெக்கானிஸம்' தோல்வியுறும் பட்சத்தில், மனிதர்கள் மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சிக்குத் தயாராகிறார்கள்  என்பதே.

அஷ்டாங்க சங்கிரஹம்  எனும் ஆயுர்வேத நூலில்  "ஸ்நேஹ பாணம்" எனும் அத்தியாயத்தில் மஜ்ஜையைப் போஷிப்பிதுக் கொள்ளும் சிகிச்சை முறைகள் விரிவாகக் காணப்படுகின்றன. பொதுவாக மஜ்ஜயைப் புஷ்டிபடுத்த ,  நீர்பாசன, காற்றோட்டமுள்ள  இடங்களில் வாழும் உயிரினங்களின் மாமிசத்தைக் கொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட மாமிச சூப்புடன், நெய்யை தாராளமாக தாளித்து எழும்புக்குள்   உள்ள சோறு, அதனுடன் சேர்த்து வெதுவெதுப்பாக  காலையில் முதல் உணவாகப் பருக, மிக நல்லதாகும்.

விற்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் ப்ருகச் சாகலாதி கிருதம், அமிருதபிராசம், அஜஅஸ்வகந்ததிலேஹ்யம்  போன்றவை சிறந்தவை. ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றை உபயோகிப்பது மிகவும் நல்லது.

 

நன்றி  ; பேராசிரியர்        எஸ்.சுவாமிநாதன்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.