தமிழகத்தில் தற்போது அசாதார ணமான சூழ்நிலை நிலவுவதாக நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.‘துக்ளக்’ வார இதழின் 47-வது ஆண்டுவிழா சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்கு புகழஞ்சலி செலுத்தும்விழாவாக நடைபெற்றது.விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

சோ இல்லாத இந்தமேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சிங்கம் போல இருந்த அவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலமில்லாமல் இருந்துவந்தார். மருத்துவமனையில் அவர்படும் துயரங்களைப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது.

‘நான் இருக்கும்வரை நீங்கள் இருக்கவேண்டும்’ என சோவிடம் ஜெயலலிதா கூறினாராம். இதனை சோவே என்னிடம் கூறினார். அதுபோல ஜெயலலிதா இருக்கும்வரை சோ இருந்தார். அவர் மறைந்த மறுநாளே சோ மறைந்தார்.

சோ மறைந்தபோது பெரிதாக எந்தவருத்தமும் இல்லை. ஆனால், இப்போது தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையைப் பார்க்கும் போது அவர் இல்லையே என வருத்தம் ஏற்படுகிறது. இந்தச்சூழலில் அவர் இருந்திருந்தால் அவரது கருத்துக்களை கூறியிருப்பார்.

சோ எனக்கு மிகச்சிறந்த நண்பராக, ஆலோசகராக விளங்கினார். நான் பெருமையாக நினைக்கும் விஷயம் இது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய போது இது மிகப் பெரியதாக வளர்ச்சி அடையும். எனவே, சென்னை அணியை வாங்குமாறு அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், நான் வாங்கவில்லை. அப்போது சில லட்சங்களில் இருந்த ஐபிஎல் அணி அப்போது பலஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், வாஜ்பாய் முதல் இன்றைய பிரதமர் நரேந்திரமோடி உட்பட அனைவரும் சோவின் நண்பர்கள். பிரதமர் உள்ளிட்ட தேசியத்தலைவர்கள் சிக்கலான நேரங்களில் சோவிடம் ஆலோசனை கேட்பார்கள். சோவிடம் ஆலோசனை கேட்காத அரசியல் வாதிகளே இருக்க மாட்டார்கள்.

நகைச்சுவை உணர்வுமிக்க சோ துணிச்சலானவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களைக்கூட தனது நகைச்சுவை, துணிச்சலால் கலாய்த்துள்ளார். சோவின்பலம் அவரது உண்மைதான். அதைத்தான் நாம் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.