தமிழர்களின் தன்மான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை முழு உரிமையோடு நடத்த வேண்டும், அதன் மீதுள்ள தடைகள் அகற்றப்படவேண்டும் என்கின்ற கோரிக்கையோடு கடந்த பத்து ஆண்டுகளாக இதற்காக ஜல்லிக்கட்டு பேரவை, ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை, ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக்கான இயக்கம், ஜல்லிக்கட்டு மீட்புக் குழு, காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி அறக்கட்டளை, ரேக்ளா ரேஸ் கிளப், நாட்டு மாடுகள் பாதுகாப்பு அமைப்பு போன்ற பல அமைப்புகள் போராடி வந்தார்கள். அதனுடைய விளைவாக, ஒட்டுமொத்த தமிழகர்களுடைய ஆதரவும் ஜல்லிக்கட்டிற்கு உருவாகியது.

தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் முழு நம்பிக்கை கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தமிழக முதல்வர் அவர்களிடம் ஜல்லிக்கட்டு சம்பந்தமாக உள்ள சட்ட ரீதியான சூழ்நிலைகளை விளக்கி, தமிழக அரசாங்கமே அவசர சட்டம் கொண்டு வருவது சரியாக இருக்கும் என்று எடுத்து கூறி, அதற்கு தன்னுடைய முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தான் தருவேன் என்று உறுதி கொடுத்து ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை முப்பது மணி நேரத்திற்குள்ளாக நிறைவேற்ற செய்துள்ளார்கள். இதற்காக பிரதமர் அவர்களுக்கு தமிழ் சமுதாயம் சார்பாக நன்றி.

இந்த சரித்திர நிகழ்வுக்காக போராடிய ஜல்லிக்கட்டு அமைப்பை சேர்ந்த அனைவருக்கும், போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட அனைவருக்கும், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை உடனடியாக கொண்டு வந்த தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநர் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளையும், வாழ்த்துக்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டை நாம் நிரந்தரமாக நடத்த கிடைத்த உரிமையின் அடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நமது இளைஞர்களும், பொதுமக்களும் ஜல்லிக்கட்டை நடத்துவதை தொலைக்காட்சியில் பார்த்து நான் ஆனந்தக்கண்ணீர் வடித்தேன். ஜல்லிக்கட்டை நடத்திய அனைத்து ஊர்களை சேர்ந்த என் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

இன்று தமிழகத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டினை தமிழினம் உள்ளவரை தொடர்ந்து நடத்துவதற்கு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசு முழு பக்கபலமாக இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.

தமிழர்களின் பாரம்பரியத்தை மதித்து, அதைக்காக்க உறுதி அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வார்த்தைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு, இன்றோடு முடிந்துவிடாமால், தமிழகம் முழுவதும் தமிழர்களின் உரிமை பெற்ற கொண்டடாட்டமாக, நம் தமிழ் சமுதாயம் கொண்டாட வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

 

ஜல்லிக்கட்டு நடத்த பெற்றுள்ள உரிமையை பயன்படுத்தி ஜல்லிக்கட்டினை நடத்தவும், அந்நிகழ்ச்சிகளில் நேரடியாக கலந்து கொள்ளவும், போராட்டக்களத்தில் உள்ள அனைவரையும் உடனடியாக வாடிவாசல் நோக்கி பயணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

போராட்டத்தால் பாதிக்கப்பட்பட்டுள்ள நம் தமிழக மக்கள் தங்களது அன்றாட பணிகளை நடத்தும் வகையிலும், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்பவர்கள், சுக துக்கங்களில் பங்குகொள்ள பயணம் செய்ய வேண்டியவர்கள் இப்போராட்டத்தால் பல நாட்களாக முடங்கி போயுள்ளனர். இந்த நிலையை மாற்றிட போராட்டக்களத்தில் உள்ள என் தமிழ் சொந்தங்களை இப்போராட்டத்தை நிறைவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 – பொன். இராதாகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.