கேரளத்தில் பாஜக தொண்டர்கள்மீது அரசியல்ரீதியில் நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்துநிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அந்தமாநிலத்தைச் சேர்ந்த ஜனாதிகார் சமிதி என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக ஜனாதிகார் சமிதி சார்பில் எழுதப்பட்ட மனுவை அந்தஅமைப்பின் செயலாளர் அலோக் குமார், தில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அளிக்க திட்டமிட்டிருந்தார்.எனினும், ராஜ்நாத்சிங் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பஞ்சாப் சென்றுள்ளதால் அந்தமனுவை உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீரிடம் அலோக்குமார் ஒப்படைத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:


கேரளத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், மார்க்சிஸ்ட் தொண்டர் களால் தொடர்ந்து கொலை செய்யப்பட்டும், வீடு புகுந்துதாக்கப்பட்டும் வருகின்றனர். மாநிலம் முழுவதிலும், குறிப்பாக கண்ணனூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்த சம்பவங்களைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது நடைபெற்ற இந்தச் சம்பவங்கள், இடதுசாரி முன்னணி ஆட்சி அமைந்தபிறகு மேலும் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது.
எனவே, தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்தத்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.


மேலும், தாக்குதல்களில் பலியானோரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு மற்றும் மறு வாழ்வு நடவடிக்கைகளை அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளை தங்கள் அரசு எடுக்கவேண்டும்.
அதேபோல், இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடும் குற்றவாளிகள்மீது கேரள அரசு கடும் நடவடிக்கை எடுப்பதை தாங்கள் உறுதிப்படுத்தவேண்டும். அப்போதுதான் மாநிலத்தில் நிலைமை மேலும் பதற்றமடையாமல் கட்டுப்படுத்தப்பட்டு, அமைதிநிலவும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.