ரயில்வே பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் உறுவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட், முதன்முறையாக புதன்கிழமை பொது பட்ஜெட்டுடன் (2017-18) சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:

* 2017-18 நிதியாண்டில் ரயில்வே துறைக்காக ரூ.1.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். இது நடப்பு நிதியாண்டில் ரூ.1.21 லட்சம் கோடியாக உள்ளது.

* 3,500 கி.மீ. துரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். இது நடப்பு நிதியாண்டில் 2,800 கி.மீ. ஆக உள்ளது.

* ரயில் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்படும்.

* அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்துகளை தடுக்க ரயில் பாதைகள் மற்றும் சமிக்ஞைகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். மேலும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 2020-க்குள் அகல ரயில் பாதைகளில் உள்ள ஆளில்லா லெவல் கிராஸிங்குகள் அகற்றப்படும்.

* நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

* அனைத்து ரயில் பெட்டிகளிலும் 2019-க்குள் உயிரி கழிவறை அமைக்கப்படும். பயணிகளின் வசதிக்காக, ‘என்னுடைய பெட்டியை சுத்தம் செய்யவும்’ என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படும்.

* இணையதளம் வழியாக டிக்கெட் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், ஐஆர்சிடிசி இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

* ஐஆர்சிடிசி, ஐஆர்எப்சி மற்றும் கான்கர் ஆகிய ரயில்வே பொதுத் துறை நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.

* ஆன்மிக மற்றும் சுற்றுலா தலங்களுக்கென தனி ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* புதிய மெட்ரோ ரயில் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply