உத்தரப் பிரதேசத்தில் பாஜக.,வுக்கு ஆதரவாக அலை வீசுவதால் முதல்வர் அகிலேஷ்யாதவ் அச்சமடைந்து பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

அலிகர் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல்பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் சட்டம்ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசு தவறிவிட்டது. இதனால் பெண்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மாநில வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் ஊழல், சாதி மோதல், குடும்பஆட்சி ஆகியவற்றை ஒழிக்க எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக ஆளும்கட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்து ள்ளனர். இதனால், பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதால் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என அச்சமடைந்துள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக பிற கட்சிகளுடன் (காங்கிரஸ்) கூட்டணி அமைத்துள்ளார்.

மின்சார உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் புகழ்பெற்ற அலிகர் பூட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே, இந்தத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் மின்சாரம், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அத்துடன் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும்.

மேலும் கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க மத்திய அரசு கடும்நடவடிக்கை எடுத்துவருகிறது. குறிப்பாக பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை விமர்சனம்செய்து வருகின்றன. உ.பி. தேர் தலில் வெற்றி பெறுவதன் மூலம், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும். இது நடந்து விட்டால் ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவேதான் எதிர்க் கட்சிகள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply