இந்திய விடுதலைப் போராட்டம் ஆயிரக்கணக்கான வீரர்களை வரலாற்றிற்கு வழங்கியிருக்கிறது. இந்தப் பெருமக்களில் உன்னதமான இடத்தை வகிப்பவர் சுபாஷ் சந்திரபோஸ்.

இந்தியாவில் உயர்ந்த உத்தியோகத்தை வகிப்பதற்கு உறுதுணை செய்யும் ஐ.சி.எஸ். பட்டத்தை அவர் இளம் வயதிலேயே பெற்றார். ஆயினும் அவர் அந்தப் பட்டத்தை அடிப்படையாய் வைத்துக்கொண்டு தம் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவில்லை.

இங்கிலாந்தில் படிப்பை முடித்துக்கொண்டு, அவர் இந்தியாவுக்குத் திரும்பிவந்த நேரத்தில் ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியிருந்தார்.

கட்டாக்கிலும், பின்னர் கல்கத்தாவிலும் மாணவராக இருந்தபோது, வெள்ளை நிறத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள். இந்தியர்களைத் தாழ்த்திப் பேசியதைப் பொறுக்காமல் பொங்கி எழுந்து போராடியவர். சுபாஷ் சந்திரபோஸ். அன்னியர்களின் ஆதிக்கம் நம் அன்னை நாட்டில் இருக்கக்கூடாது என்ற எண்ணம் இளமையிலேயே அவரது இதயத்தில் விதையாக விழுந்திருக்கிறது.

அப்படிப்பட்டவர், ஆங்கில அரசின் ஆதிக்கத்தை ஒடுக்கவும், ஒழிக்கவும் அமைதியான முறையில் போராட்டம் தொடங்கியிருக்கும்போது, தனக்கென ஓர் உத்தியோகத்தை அந்நியர்கள் அளித்தால் போதும் என்று நினைப்பாரா?

தன் வாழ்வும், எதிர்காலமும் முக்கியமில்லை. தன் நாட்டின் வாழ்வும் எதிர்காலமும்தான் முக்கியம் என்றே சுபாஷ் கருதினார். இந்தக் கருத்துதான், அவரை மகாத்மா காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொள்ளவைத்தது.

காந்திஜியின் இயக்கத்தில் சுபாஷ் முழு மூச்சுடன் கலந்து கொண்டாலும், விரைவில் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு விலகிச்சென்றார். 1941-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ரகசியமாக வெளியேறி, ஆப்கானிஸ்தான், சோவியத்யூனியன், போலந்து வழியாக ஜெர்மனிக்குச் சென்ற சுபாஷ், பர்மாவின் சரணாகதிக்குப் பின்னர் மலேசியா மண்ணில் உருவான இந்திய தேசிய இராணுவம் என்ற விடுதலைப் படைக்குத் தலைமை வகிப்பதற்காக, இரண்டாண்டுகளுக்குப் பின் நீர்மூழ்கிக் கலம் மூலம் ஜெர்மனியிலிருந்து நெடுந்தூரம் பயணம்செய்து ஜப்பானை அடைந்தார்.

ஹிட்லருடன் அவர் பழகியிருக்கிறார். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நாட்டையும், இராணுவத்தையும் நிருவகித்த டோரேவுடனும் பழகியிருக்கிறார். ஆயினும் இருவரையும் தமது வழிகாட்டிகளாக அவர் ஏற்கவில்லை.
இந்தியாவின் விடுதலைக்காகப் பாடுபட்ட மகாத்மா காந்தியைத்தான் அவர் தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பது, இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு உரையாற்றிய போது, அவர் வெளியிட்ட கருத்துகளின் மூலம் தெளிவாகிறது.
கேட்போரைக் கவரும் விதத்தில் பேசுவதில் சுபாஷ் சந்திரபோஸ் வல்லவர். இவரது உரையைக் கேட்டால், கோழைக்கும் வீரம் பிறக்கும் என்று சொல்லப்படுவதுண்டு.
அத்தகைய சொற்பொழிவுகளில் ஒன்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்:
"ஒரு நாட்டின் விடுதலை என்பது, பேரம்பேசி வாங்க வேண்டிய கடைப்பொருளன்று. இந்தியாவின் அரசியல் ஆதிக்கத்தை நாம் யுத்தக்கலத்தில்தான் இழந்தோம்.
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற வர்த்தக நிறுவனத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு இங்கே பொருள்களை விற்கவும், மூலப் பொருட்களை வாங்கவும் ஆங்கிலேயர்கள் வந்தனர்.
ஔரங்கசீப்புக்கு பிறகு மொகலாயப் பேரரசு இந்தியாவில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. டில்லியில் பலமான அரசு இல்லாததால் மொகலாயப் பேரரசின் கவர்னர்கலாகப் பதவி வகித்தவர்கள். தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுதந்தரமான அரசர்களாக வர முயற்சி செய்தனர்.

இத்தகைய முயற்சியின்போது, சச்சரவுகளும் மோதல்களும் ஏற்படுவது இயற்கையே! எனவே, யார் பட்டத்திற்கு வருவது, யாருக்கு அரியணை சொந்தம் என்ற போட்டி இந்தியர்களிடையே ஏற்பட்டது.

இந்தியர்களிடையே ஏற்பட்ட போட்டியை ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டனர். தென்னிந்தியாவிலும், வங்காளத்திலும், பின்னர் கங்கைபாயும் சமவெளியான ஐக்கிய மகாணத்தில் அடங்கிக்கிடக்கும் இராஜ்யங்களிலும் தலையிட்டு, தங்கள் ஆதிக்கத்தை உருவாக்கிக் கொண்டனர்.

1857-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆங்கிலேய எதிர்ப்பும் புரட்சியும் இந்தியர்களிடையே ஒற்றுமை இல்லாததால் தோல்வியடைந்தது. அந்தத் தோல்விக்குப் பிறகு மன்னர்களின் எதிர்ப்பு மறைந்துவிட்டது.

1905-ஆம் ஆண்டில் வங்கத்தை மத அடிப்படையில் கர்ஷன் பிரித்ததன் மூலம், மக்களிடயே ஆங்கிலேய எதிர்ப்பைத் தூண்டிவிட்டார். மன்னர்களுக்குப் பதிலாக மக்கள் களத்தில் குதித்து எதிர்ப்பைத் தொடங்கினர்.

இந்த எதிர்ப்பு இயக்கங்கள் சிலவற்றில் நமது தேசபக்தர்கள் ஆயுதங்களை ஏந்தினர் என்பது உண்மையே! ஆனால், அவர்களுக்குப் போதிய ஆதரவு இல்லாததால் அடக்கப்பட்டனர்.

ஆனால் வாள் எடுத்தவன் வாளால் மடிவான் என்ற மூதுரைக்கேற்ப இந்தியாவில் ஆயுதங்களின் மூலம் ஆதிக்கத்தை உருவாக்கிக் கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியர்கள் ஏந்திபிடிக்கும் ஆயுதங்களினால்தான் இந்திய மண்ணிலிருந்து விரட்டப்படுவார்கள்.

டில்லியில் தலைமைப் பீடம் அமைத்து ஆட்சி புரியும் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்துப் போராட இந்திய தேசிய இராணுவம் தயாராகிவிட்டது. உங்கள் கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும்.

இங்கிருந்து புறப்படும் நாம் டில்லியை அடையும் வரையில் ஓய்ந்து நிற்பதில்லை. அந்நிய ஆட்சியிலிருந்து விரைவில் விடுபடுவோம். இதுவே நமது கோஷமாகும்!"

நன்றி : நா.ரா. பண்டரிநாதன்

Leave a Reply