“நல்லமுடிவு எடுப்பதில் கவர்னர் காலம் தாழ்த்துவது தவறு கிடையாது”, என்று பொன்.ராதாகிருஷ்ணன், தெரிவித்துள்ளார்.

மத்திய இணை-மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்த விவகாரத்திலும் கவர்னர் உடனடியாக முடிவு எடுக்கவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. நல்லமுடிவு எடுக்க வேண்டும் என்றால் கவர்னர் சிறிதுகாலம் எடுக்கலாம். அதில் தவறு கிடையாது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக யார் வரவேண்டும்? என்ற விவகாரத்தில் பாஜக.வின் தலையீடு நிச்சயம் கிடையாது. தமிழகத்தின் நலன் கருதி பல்வேறு நிலைகளில் ஆராய்ந்து யோசித்துதான் கவர்னர் முடிவு எடுக்கமுடியும். தமிழக கவர்னர் மதிப்புக்குரியவர், அவரை கட்டாயப்படுத்த முடியாது.

தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. சட்டமன்றகட்சி தலைவராக சசிகலா தேர்வானது, அதனைத் தொடர்ந்துதான் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யப்பட்டதாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறி தனி ஆளாக வெளியேறி புரட்சியில் ஈடுபட்டுவருவது போன்ற விஷயங்கள் தமிழக அரசியலில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

தமிழக அரசியலில் நிலவும் இப்பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவுகட்ட, ஒருநல்ல தீர்வை எடுக்க எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் கவர்னர் எடுக்கலாம். அதில் தவறுகிடையாது. அவர் காலம் தாழ்த்தவில்லை, ஒரு நல்ல நிலையான முடிவு எடுக்கவேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது. எனவே முடிவு எடுக்கும்படி எவரும் கட்டாயப்படுத்த கூடாது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஏன் ஒருஇடத்தில் தங்கி இருக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. இது மிகப் பெரிய குழப்பமாகவும், அதே நேரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்து வதாகவும் உள்ளது. அ.தி.மு.க.வில் நடக்கும் பிரச்சினைகளுக்கு பின்புலமாக பாஜக. செயல்படுகிறது என்று கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒருநல்ல நிலையான அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதிலும், ஒட்டுமொத்த மக்களின் உணர்வு அளிக்கும் வகையிலும் தான் பா.ஜ.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தான் கட்டாயப்படுத்தியும், மிரட்டப்பட்டும் ராஜினாமாசெய்தேன் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். இந்தவிவகாரத்தில் முழுமையான ஆய்வை கவர்னர் மேற்கொள்ள வேண்டும். கவர்னர் பாராமுகமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் அவர் போக்கிடவேண்டும். முதல்-அமைச்சர் பதவியில் ஒருவரை அமர்த்துவது மட்டும் கவர்னரது பணிஅல்ல என்பதை அனைவரும் புரியும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.