சமாஜவாதி நிறுவனர் முலாயம்சிங்கை கொலைசெய்ய முயன்ற காங்கிரஸ் கட்சியுடன் அக்கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூட்டணி வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம், கன்னோஜில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்தல்தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சமாஜவாதியும், காங்கிரஸும் பரஸ்பரம் ஒன்றையொன்று குற்றம்சாட்டின. ஆனால், திரைப் படங்களில் வருவதுபோன்று இடைவெளிக்குப் பிறகு எதிரிகள் நண்பர்களாகி கூட்டணி சேர்ந்துள்ளனர். சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி, மக்களின் கனவுகளை தகர்த்து விடும்.


கடந்த 1984-ஆம் ஆண்டில் முலாயம்சிங்கை காங்கிரஸ் படுகொலைசெய்ய முயன்றது. சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக அக்காலத்தில் முலாயம் இருந்த போது காங்கிரஸ் கட்சியினர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காயத்துடன் முலாயம் தப்பினார். இதை முலாயம் சிங்கின் மகனான அகிலேஷ் மறந்து விட்டாரா? காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு, இந்தச்சம்பவத்தை அகிலேஷ் நினைத்து பார்த்திருக்க வேண்டும். தனது தந்தையை கொலை செய்யமுயன்ற கட்சியுடன் ஒருவர் தேர்தலில் கூட்டணி அமைப்பது எவ்வளவு வெட்கக்கேடான செயலாகும். இதை ஒரு போதும் மன்னிக்க முடியாது.


அகிலேஷ் யாதவுக்கு அரசியலில் போதிய அனுபவம்கிடையாது. இதனால் காங்கிரஸ் கட்சி எந்தளவுக்கு கபடகரமான கட்சி என்பது குறித்து அவருக்குத்தெரியாது. அதுகுறித்து முலாயம் சிங்குக்கு நன்குத்தெரியும்.
உத்தரப் பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி, ஒருபக்கம் பகுஜன் சமாஜ் கட்சியுடனும், மறுபக்கம் சமாஜவாதியுடனும் கூட்டணியமைத்து போட்டியிடுகிறது. ராகுல்காந்தியுடன் சேர்ந்து அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசியபோது பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதியை விமர்சித்தார். அப்போது ராகுல் காந்தியிடம் மாயாவதி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், மாயாவதி குறித்து தனக்கு அதிகம்தெரியாது என்று பதிலளித்தார். இதிலிருந்து, சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியின் ரகசியகூட்டாளியாக பகுஜன் சமாஜ் இருப்பதை புரிந்து கொள்ளலாம்.


உத்தரப் பிரதேச தேர்தலில் சமாஜவாதி, காங்கிரஸ், பகுஜன்சமாஜ் கட்சிகளால் வெற்றிபெற முடியாது. இத்தேர்தலில் பாஜக தனது சொந்தகால்களில் போட்டியிடுகிறது. அக்கட்சிகளை பாஜக தோல்வியடையச் செய்யும்.
உத்தரப் பிரதேசத்தில் ஊழல், சட்டம்-ஒழுங்கு, கலவரங்கள், பெண்களுக்கு எதிராக அடக்கு முறைகள், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, தாய்-சேய் உயிரிழப்பு, சொந்தபகுதியிலிருந்து மக்கள் வெளியேறுதல் ஆகியவையே நடக்கின்றன. ஆனால், அகிலேஷ்யாதவ் தனது பணிகள் தனக்காக பேசும் என்கிறார். அவரது பணிகள் பேசாது, தவறுகள் தான் பேசும்.


சிறுவிவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்: விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாஜக தேர்தல் அறிக்கையில், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவைகளை குறைந்த பட்ச ஆதார விலையில் வாங்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. உருளைக் கிழங்கு பயிரிடும் விவசாயிகள் உயிரிழப்பதை பாஜக அனுமதிக்காது. இதேபோல், பாஜக தேர்தல் அறிக்கையில், சிறுவிவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த மாநிலத்தின் எம்.பி. என்ற முறையில், இந்த வாக்குறுதியை பாஜக அரசு அமைந்ததும் முதல் நடவடிக்கையாக செயல்படுத்தும் என்று உறுதியளிக்கிறேன்.கடந்த மக்களவை தேர்தலில், இந்தத்தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவின் மனைவி (டிம்பிள்யாதவ்), சிப்ஸ் ஆலை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், இதுவரை அமைக்கப் படவில்லை. இதுகுறித்து அவரிடம் நீங்கள் பதில்கேட்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் சமாஜவாதி அரசு, ஏழைகளுக்கு விரோத மானது. நாட்டின் பிரதமராக இருக்கும் எனக்கு சொந்தமாக காரோ, வீடோகிடையாது. ஆனால், சமாஜவாதி தலைவர்களுக்கு கார்கள் படையே உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் காப்பகத்தில் கூட ஊழல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இது எந்த வகையான சோஸலிசம்?


உத்தரப் பிரதேச ஏழைகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய உணவுதானியங்கள் அவர்களைச் சென்றடையவில்லை. இதற்கு உத்தரப்பிரதேச அரசே காரணம். அதை பெற உத்தரப் பிரதேச அரசு ஆர்வம் காட்டவில்லை.
உயர்மதிப்பு ரூபாய் மதிப்பிழப்பு விவகாரம், துல்லியத்தாக்குதல் ஆகியவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக 3 மாதமாக அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுவருகின்றன. கருப்புப் பணம், ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை தொடரும் என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.