உத்தராகண்ட் மாநில முதல்-மந்திரியாக பா.ஜ.க எம்எல்ஏக்கள் கூட்டத்தில் திரிவேந்திரசிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார்.

 

 
70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா அமோகவெற்றி பெற்றது. பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே இழுபறி இருக்கும் என்று கூறப்பட்டநிலையில் பா.ஜனதா அபாரவெற்றி கண்டது. மோடியின் சுனாமி அலை என்று கூறப்படும் அளவிற்கு இந்தவெற்றி இருந்தது. 70 தொகுதிகளில் 36ஐ வென்றாலே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் அனைத்துதொகுதிகளின் முடிவுகளும் வெளியானபோது பா.ஜனதா 57 தொகுதிகளில் வெற்றியை சுவைத்தது.
 
பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தலைவர் திரிவேந்திரசிங் ராவத் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தர்மேந்திர பிரதான், ஜே பி நட்டா, ஷியாம் ஜாஜு, சரோஜ் பாண்டே மற்றும் கண் காணிப்பாளர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் திரிவேந்திரசிங் ராவத்தை கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அறிவித்தனர். திரிவேந்திரசிங் ராவத் அரசியல் வாழ்க்கையானது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடங்கியது. 
 
56 வயதாகும் திரிவேந்திரசிங் ராவத் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவிற்கு மிகவும் நெருங்கியவர். உத்தரபிரதேச மாநிலத்தில் 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது முக்கியபங்கை வகித்தவர். உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்றத் தேர்தலிலும் பாரதீய ஜனதா மகத்தான வெற்றியைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திரிவேந்திர சிங் ராவத் நாளை மாலை உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சரவை மந்திரிகள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply