அயோத்தி பிரச்னை பதற்றம் நிறைந்ததுடன், உணர்வுப் பூர்வமான விஷயம் என்பதால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்துபேசி சுமுகத்தீர்வு காண, புதிய சமரச முயற்சி தொடங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிதொடுத்த வழக்கில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால் சமரச பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர்களை நியமிக்க தயார் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனை நடத்திவிட்டு, வரும் 31-ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்குமாறும் சுவாமியை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி- பாபர் மசூதி பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே நீண்டகாலமாக பிரச்சனை நீடித்துவருகிறது.

இந்நிலையில், தகராறுக்கு உட்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை, அதற்கு உரிமைகொண்டாடும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் நிர்மோஹி அகாரா என்ற ஹிந்து மடம் ஆகிய மூன்று தரப்பினருக்கும் சரிசமமாகப் பிரித்துவழங்க அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.


இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சார்பில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அயோத்தியில் இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர்கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்காகக்கருதி விரைந்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.


இதனை விசாரித்த அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு, அயோத்திபிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளில் அவரையும் ஒருதரப்பாக சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்தது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில், டி.ஒய். சந்திரசூட், எஸ்கே.கெளல் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுமுன்னர் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: ’’அயோத்தி விவகாரமானது மதங்கள் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்னையாகும். இத்தகைய பிரச்னைகளில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக அமர்ந்துபேசி, பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர ஒருமித்த அடிப்படையில் சுமுகத்தீர்வு காணவேண்டும். ஆகையால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றாகஅமர்ந்து, சுமுக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்'' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்


இந்நிலையில் குறுக்கிட்ட சுப்பிரமணியன் சுவாமி, சுமுகப்பேச்சுவார்த்தை தொடர்பாக முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளைத் தாம் அணுகியதாகவும், ஆனால் இப்பிரச்னைக்குத் தீர்வுகாண நீதிமன்றத்தின் தலையீடு அவசியம் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்ததாகவும் கூறினார்.


இதனைக் கேட்ட பின்னர் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் கூறியதாவது: ’’ஒருமித்த முறையில் சுமுகத் தீர்வு காண்பதற்காக நீங்கள் (சுப்பிரமணியன் சுவாமி) மீண்டும் ஒரு முயற்சியை மேற்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இதற்கு ஒரு சமரசத் தீர்வாளரை வைத்துக்கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட தரப்பினர் விரும்பினால், இரு தரப்பினராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் கொண்ட குழுவுக்கு நான் தலைமை தாங்கத்தயார். இல்லையேல், வேறு ஓர் உச்சநீதிமன்ற நீதிபதியை தலைமை மத்தியஸ்தராக நியமிக்கவும் தயார்'' என்று அவர் கூறினார்.


இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசி, வரும் 31-ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்திடம் சுப்பிரமணியன் சுவாமி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கேஹர் கேட்டுக்கொண்டார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.