ஆர்.கே. நகர் தேர்தல் ரத்தாகியிருக்கிறது. தஞ்சை அரசங்குறிச்சிக்கு அடுத்து பணப்பட்டுவாடாவும் நடைபெற்றிருக்கிறது என்று பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்டிருப்பதால், தேர்தல் தடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல தேர்தல் நேர்மையாக நடைபெற முடியும் என்று உறுதியான நிலை வரும்போது தேர்தலை நடத்துவோம் என்றும், அறிவித்திருக்கிறார்கள்.


ஆக, இனிமேல்வரும் தேர்தல்களால் நேர்மையான நடைமுறையில் நடக்கும் என்று நம்புவோம். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முறைகேடு நடந்திருப்பதாலும், பணப்பட்டுவாடா அதிகமாக நடந்திருப்பதாலும், அதனால் போட்டியிடும் களம் சமதளத்தில் இல்லாமல் ஏற்றத்தாழ்வு உள்ள களமாக உள்ளதால் தேர்த்ல் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால், கடைசியில் ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாட்டை வாகன சோதனைகளையும் முதலிலேயே கட்டுப்பாடுகள் விதித்து தொகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பண விநியோகத்தை கட்டுப்படுத்தியிருந்தால், தேர்தல் ரத்தாகியிருக்காது.

 

ஆனால், அத்தனை வேட்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி தொண்டர்கள் நேரம்,; காலம், கடுமையான உழைப்பு, பிரச்சாரம் எல்லாம் வீணாகப் போகும் அளவிற்கு கடைசி நாள் வரை தாமதித்து முடிவு எடுத்திருப்பது கவலை அளிக்கிறது. அதனால் மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் புகார் கொடுத்தபோது அதை புற்ககணித்து, வருமான வரித்துறை கிடைத்த பின்பு நிறுத்தியிருப்பது தமிழக தேர்தல் ஆணையத்தின் இயலாமையே ஆகும். ஆனால் அதே சமயம் திமுகாவால் ஆரம்பிக்கப்பட்ட திருமங்கலம் பார்முலா ஆர்.கே. நகர் பார்முலாவில் முற்றுப் பெறும் என்றே நினைக்கிறேன்.


அதே சமயம் நாம் வரும் தேர்தல்கள் அத்தனையும் நேர்மையாக நடக்க வேண்டும் என்பது மட்டுமல்ல முறைகேடுகளில் ஈடுபட்டவர்களும், கட்சியும் போட்டியிடும் தகுதியை இழந்தால் மட்டுமே இத்தனை முறைகேடுகளையும் முற்றிலுமாக தடுக்க முடியும். ஆக, எப்படி நல்ல முன்னேற்றங்கள் வருவதற்கு இந்த தேர்தல் ரத்து நமக்கு ஆரம்பமாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த தேர்தல் ரத்தை ஓர் ஆரம்பமாகஎடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வருங்கால தேர்தல் சீர்திருத்தங்களுக்கு இது வழி வகை செய்யும் என்பதும் எந்த ஒரு நிகழ்வும் நல்ல நடைமுறைக்கு வழி வகை செய்யும் என்றே இதை நேர்மறையாக எடுத்துக் கொள்வது நல்லது.


ஆனால் இதையே எதிர்முறையாகச் சிந்திக்கும் சிலர் இதற்கு காரணம் பாஜக என்றும் பாஜக காலூன்றுவதற்கே இத்தகைய நடவடிக்கை என்றும், அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். எங்கள் வேட்பாளர் கங்கை அமரன் அவர்களும் எங்கள் கட்சி கட்சி தொண்டர்களும் கடுமையாக உழைத்துள்ளார்கள். ஆக, இந்த உழைப்பு வீணாகி விட்டதே என்ற ஆதங்கம் எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் வருங்காலம் அனைவரும் களங்கமான தளத்தில் இல்லாமல் சமதளத்தில் தேர்தலைக் கண்டால்தான் நல்லவர்க்ள தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற வகையில், இதை ஏற்றுக் கொள்கிறோம். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் காசு கொடுத்து ஓட்டு வாங்குவதற்கு அத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அதனாலேயே தேர்தல் ரத்து செய்வதற்கு காரணமாகிவிட்டு, தினகரன் போன்றவர்கள் இது ஒரு ஜனநாயக படுகொலை என்கிறார். பணம் கொடுத்து ஜனநாயகப் படுகொலை செய்து விட்டு தேர்தல் ரத்தை ஜனநாயகப் படுகொலை என்று எப்படி சொல்ல முடியும்.
அதுமட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜக பலவீனமாக இருப்பதால் தேர்தல் ரத்தாகியிருக்கிறது என்கிறார். பல மாநிலங்களில் பலமாக வெற்றி பெற்றிருக்கும் நாங்கள் பலத்தை கூட்டி வருகிறோம். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் பலம் பெற வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.


பன்னெடுங்காலமாக பெருகிவரும் ஊழல் நடைமுறை தேர்தல் நடைமுறையாக மாறியிருப்பதால் இதற்கு ஓர் விடிவுகாலமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் போது தேர்தல் சீர்திரு;த்தம் நமக்கு வழி வகை செய்யும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்களை ஏழைகளாகவே வைத்திருந்து அவர்களுக்கு நியாயமாக சேர வேண்டியதில் சிறு துளி அளவு கொடுத்து ஏமாற்றுவதை விட 89 கோடி ரூபாய் பணத்தை அந்த அந்த மக்களின் வளர்ச்சிக்கு செலவிட்டிருந்தால் அதே மக்கள் மாதா மாதம் சம்பாதிக்கும் அளவிற்கு உயர்ந்திருப்பார்கள்.


ஆக தேர்தலில் பணம் கொடுப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தலில் ஊழலை ஒழிப்பதில் மட்டுமல்ல, அரசியலிலும் ஊழலை ஒழிப்பதற்கு சிறு அளவிலாவது வழி செய்யும்.

என்றும் மக்கள் பணியில்

Dr.தமிழிசை சௌந்தரராஜன்
மாநில தலைவர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.