கேரளமாநிலம் இடுக்கி, மூனாறு உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்களில்  தமிழ்பெண்கள் வேலைசெய்து வருகிறார்கள். இந்தபெண்களுக்கு குறைவான கூலி கொடுக்கப்படுவதாக குற்றச்சசாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து கூலியை உயர்த்தி கொடுக்கக்கோரி பெண்கள் கடந்தஆண்டு போராட்டம் நடத்தினர். அரசியல்வாதிகளையும், முதலாளி வர்க்கத்தையும் எதிர்த்து அவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அதிகார வர்க்கத்தை எதிர்த்து பெண்கள் எழுப்பிய முழக்கங்களைக்கண்டு பலரும்  அதிர்ந்தனர்.இதனைத் தொடர்ச்சியாகக் கூலியை உயர்த்திக்கொடுக்க அரசும், எஸ்டேட் நிர்வாகமும் முன்வந்தது. ஒருநாளைக்கு 232 ரூபாய் வழங்கி வந்தகூலியை 301 ரூபாயாக உயர்த்தி வழங்கினர்.  

மாபெரும் வெற்றி காரணமாக இவர்கள் "பெண்கள்  ஒற்றுமை" அமைப்பு என்றபெயரில் தங்களுக்கான ஒரு அமைப்பையும் தொடங்கினர். இதன்மூலம் தங்களுடைய உரிமைகளைக் கேட்கவும், பாதுகாப்பை உறுதிசெய்யவும் வழிவகை ஏற்படும் என்று  நம்பினர். ஆனால் பெண்களுடைய இந்த நடவடிக்கை, கேரளாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கும், முதலாளித்துவ வர்க்கத்துக்கும் மிகுந்த எரிச்சலைக் கொடுத்துள்ளது. அதன் காரணமாக இந்த அமைப்பைக் கலைக்கும்படி பலமுறை அழுத்தமும் கொடுத்து வந்துள்ளனர். ஆனாலும் இந்தப்பெண்கள் உறுதியுடன் இருந்தனர். தங்களுடைய அமைப்பின் வேலைகளை முன்னெடுத்து சென்றனர். 

இந்த நிலையில் தான் கேரள மாநில மின்துறை அமைச்சர் மணி பெண்கள் ஒற்றுமை அமைப்புகுறித்து சர்ச்சைக் குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம்தெரிவித்து பெண்கள் ஒற்றுமை அமைப்பைச்சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்றுள்ள கோமதியிடம் பேசியபோது , "அண்மையில் பெண்கள் ஒற்றுமை அமைப்பு போராட்டம்  ஒன்றைநடத்தியது. அந்த போராட்டம் குறித்து அமைச்சர்மணி கொச்சையாகப் பேசியுள்ளார். 'போராட்டத்தில் பங்கேற்றபெண்கள்  குடித்துவிட்டு, கும்மாளம் அடித்தார்கள்' என்றும் மேலும், சொல்லமுடியாத சில வார்த்தைகளைக் கொண்டும் விமர்சித்துள்ளார். பெண்களை இழிவாக பேசிய அந்த அமைச்சர் மன்னிப்பு கேட்கும்வரை எங்களது போராட்டம் தொடரும். அதே நேரத்தில், நாங்கள் நடத்திவரும் போராட்டத்தில் பங்கேற்கவரும் பெண்களைப் போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்தும் வருகின்றனர்.

தேயிலை தோட்டத்தில் வேலைசெய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் வீடுகள் கட்டி கொடுத்துள்ளது. அதைவைத்து நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அமைச்சருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் வேலையை விட்டு நீக்கிவிடுவோம் என்றும் வீட்டை விட்டு விரட்டிவிடுவோம் என்று மிரட்டி வருகின்றனர். அதன் காரணமாக பல பெண்கள் இதில் பங்கேற்கவில்லை. ஆனால் அவர்கள் எங்களைத் தொலைபேசியில் அழைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சம்பள உயர்வுக்காக நடந்தப் போராட்டத்தில் 10ஆயிரம் பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆனால் அமைச்சரின் அநாகரீகப் பேச்சைக் கண்டித்து நடக்கும் இந்தப் போராட்டத்தில் முழுமையாக பெண்களால் பங்கேற்க  முடியாத நிலையும்  உள்ளது .ஆளுங் கட்சியான  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரம் தாழ்ந்த வேலைகளைச் செய்து வருகிறது.

என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். வேலையை விட்டு விரட்டினார்கள். என்னுடைய குடும்பத்தில் கலகத்தை உருவாக்கினார்கள். ஆனாலும் பின் வாங்காமல் போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்றுள்ளேன். தொழிலாளர்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தப் பொதுவுடமை கட்சி என்று சொல்கிற மார்க்சிஸ்ட் கட்சிதான் அத்தனை அக்கிரமங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று கலங்கினார்" கோமதி 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.