அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்தும் சில திருத்தமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என நினைத்தேன். ஆனால் சமீப காலமாக தினம் ஓர் கருத்தை சொல்ல வேண்டும் என்று தினம் தினம் இப்போது திரித்த கருத்துக்களை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். எல்லா திரித்த கருத்துக்களை விட உச்சம் இன்று தமிழகத்தில் அதிமுகவை நிலையற்றதாக ஆக்குவதற்கும், பிரிப்பதற்கும், இணைப்பதற்கும் பாஜக காரணம் என்ற ஓர் அபாண்டத்தை சுமத்துகிறார்.

தமிழகத்தில் ஓர் குழந்தை கூட இதை நம்பாது என்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சொல்லப்படும் இக்கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிப்பது என் கடமை. அதிமுக அவருக்கு பிரதான எதிர்க்கட்சி ஆனால் பாஜகவிற்கு எதிராக கருத்துக்கள் சொல்கிறோம் என்று அதிமுகவிற்கு ஆதரவாக அவர்; மறைமுக கருத்துக்களை, சொல்லியிருப்பது அவருக்காக உழைத்துக் கொண்டிருக்கும் திமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எந்நேரமும் தேர்தல் வரலாம், தங்கள் ஆட்சி, தளபதி முதல்வர் என்றெல்லாம் அண்ணன் துரைமுருகன் போன்றவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அதிமுக நிலையாக இருக்க வேண்டும். ஆனால் அதை நிலைகுலைய செய்வது பாஜக தான் என்ற தொனியில் கருத்துச் சொல்லியிருப்பதை அவர்கள் தொண்டர்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதே போல், மாநில அரசு லோக் ஆயுதா அமைக்க வேண்டும். ஊழலினால் சம்பாதித்த பணம் எல்லாம் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றால் 21 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு, விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்கிறார்கள் என்று சர்காரியா கமிஷனால் பட்டம் சூட்டப்பட்ட காலகட்டத்தில் ஊழலினால் சம்பாதித்த பணத்தையும், சொத்தையும், முதலில் திமுக நிர்வாகிகளிடமிருந்து தான் பறிமுதல் செய்ய வேண்டும்;.

இன்று சாராய ஆலைகள் நடத்துபவர்களாகவும், கல்வியை வியாபாரமாக்கும் தனியார் கல்லூரிகளின் நிறுவனர்களாகவும், அரசியல் சார்ந்த செல்வந்தர்களாக இருப்பது அதிகமாக திமுகவை சார்ந்தவர்களே. இன்று வருமானத்துறை போன்ற நிறுவனங்களை, அரசியலுக்குப் பாஜக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டும் அண்ணன் ஸ்டாலின், தாங்கள் ஆட்சியில் இருந்த போது இதை தான் செய்திருக்கிறார்களா? இன்று அய்யாக்கண்ணு முதலமைச்சர் கொடுத்த உறுதி மொழியின் படி தனது உண்ணாவிரதத்தை முடித்தேன் என்று சொல்லிவிட்டு அரசாங்கம் மூலம் விவசாயிகளுக்கு ஆக்க பூர்வமாக எந்த கோரிக்கைகளையும் பெற்றுத் தராமல், ஸ்டாலினை சென்று சந்தித்து விட்டு மறுபடியும் போராட்டத்தை தொடர்வேன் என்று அறிவிக்கிறார் என்றால், அண்ணன் ஸ்டாலின் பிண்னணியில் தான் விவசாயிகள் போராட்டம் என்ற ஒன்றை அரங்கேற்றினார்களா? அதனால் தான் மத்திய அமைச்சர் பலமுறை சந்தித்துமே, பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் பின்னணியில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் தான் பாஜக எல்லா நடவடிக்கையிலும் பின்னணியில் இருக்கிறது என்று கூறும் பின்னணியும் இதுவாக தான் இருக்கும்.

என்றும் மக்கள் பணியில்

(Dr. தமிழிசை சௌந்தர்ராஜன்)

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.