மதுக்கடைகளை மூடச்சொல்லி தமிழக முழுவதும் மகளிரே தாமாக முன் வந்து மதுக்கடைகளின் முன்பு கூடி போராடுவது, கடைகள் உடைப்பது, மதுபாட்டில்களை எடுத்து தெருவில் வீசுவதும் அன்றாடக் காட்சி ஆகி வருவதும் அதனை அடக்கி ஒடுக்க காவல் துறையினர் பொதுமக்களை, பெண்கள், வயதானவர்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தடியால் தாக்குவதும் கண்டிக்கத்தக்கது. மூர்க்கத்தனமாக பெண்களைத் தாக்கும் அரசு கண் திறந்து பார்த்து மகளிர் ஏன் ஆக்ரோஷமாக போராடுவதன் காரணத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் மதுக்கடைகளால் வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பள்ளி கல்லூரி வேலைக்கு செல்லும் மகளிருக்கு குடிக்காரர்களால் ஆபத்து. குடி குடியை கெடுப்பதாலும், குடிகார கணவன்மார்களால் தங்களின் மாங்கல்யம் பறிபோய்விடுமோ என்ற பயம் அவர்களை போராடத்தூண்டுகிறது. அவர்களை ஏதோ கலவரக்காரர்கள் போல கண்மூடித்தனமாக தாக்குவதை கைவிட்டு அவர்களின் எதிர்ப்பின் காரணத்தை கண் திறந்து ஆராய்ந்து அதனை களைய வேண்டும்.

மக்களைக்காக்க வேண்டிய காவல்துறை மதுக்கடை உரிமையாளர்களின் ஏவல் துறையாக மாறி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மதுக்கடை உரிமையாளர்கள் நேரடியாக போராடும் பொதுமக்களுக்கு தலைமையேற்ற பா.ஜ.க நிர்வாகி தாம்பரம் பொற்றாமரை சங்கருக்கு கொலை மிரட்டல் போன்ற நிலை தமிழக அரசுக்கு தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாறும் என எச்சரிக்கிறேன்.

 

சென்றமுறை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மண்டல அளவில் மதுக்கடைகளுக்கு எதிராக போராடி தமிழகம் எங்கும் சுமார் 15,000 பா.ஜ.க வினர் கைதாகினோம். திருப்பூர் சியாமளாபுரத்தில் போலிசாரால் கண் மூடித்தனமாக தாக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து, குறிப்பாக காவல்துறையினரால் அறையப்பட்டு செவித்திறன் இழந்த சகோதரியை உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிகாட்டினோம்.

மதுவில்லா தமிழகம் வேண்டும் அதை நோக்கிச் செல்ல தமிழக அரசு முயல வேண்டும், படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் எனபது மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்ன உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய அரசு மது கடைகளை மூடச்சொல்லி போராடும் மக்கள் மீது நேரடி தாக்குதல் நடத்துவது என்ன நியாயம்?

மக்கள் விரும்பாத இடங்களில் உள்ள மதுக்கடைகளை அரசு உடனே மூட வேண்டும். மதுவுக்கு எதிராக தமிழகப் பெண்களின் போராட்டத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சொல்ல பெண்களை திரட்டி வரும் ஜூன் 16 ஆம் தேதி நானே தலைமையேற்று கோட்டை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம் என தெரிவிக்கிறேன்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.