பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்குவந்து மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. பல நம்பிக்கையூட்டும் திட்டங்களால் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய வெற்றி, மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்த ஆட்சியின் மீது மக்கள்வைத்திருந்த நம்பிக்கையை சற்றும் குலையாமல் அப்படியே தக்கவைத்து கொண்டிருப்பது. இரண்டாவது ஆண்டு நிறைவுபெறும் போது இருந்ததைவிட இப்போது மூன்றாவது ஆண்டு நிறைவுபெறும்போது, இந்த ஆட்சி கூடுதல் வலிமையுடன் காணப்படுகிறது என்பதுதான் ஆச்சரியமான சாதனை.


நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யும் மாதத்தை மாற்றியதும், ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைத்ததும், மோடி அரசின் மூன்றாவது ஆண்டு சாதனைகளில் முக்கியமானவை. நரேந்திர மோடி அரசின் கடந்த ஓர் ஆண்டு செயல்பாட்டில், பொருளாதாரம் சார்ந்த சில துணிச்சலான முடிவுகள் மிகப்பெரிய பங்கு வகித்தன.


திவால் சட்டம் (Insolvency and Banktruptcy code) ஒருமிக முக்கியமான முடிவு. அதேபோல வருகிற ஜூலை மாதம் முதல் சேவை மற்றும் சரக்கு வரி நடைமுறைக்கு வர இருப்பதும் மிகவும் துணிச்சலான முடிவு.
கடந்த ஓராண்டில் நரேந்திர மோடி அரசின் மிகவும் துணிச்சலான, அதே நேரத்தில் யாரும் சற்றும் எதிர்பாராத முடிவு, ரூ.500, ரூ.1000 செலாவணிகளை செல்லாததாக்கியது. புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 96% நோட்டுகளை திடீரென்று ஒருநாள் செல்லாததாக அறிவித்த முடிவால், ஒரு மாதம் ஒட்டுமொத்த இந்தியாவே செலாவணித் தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்தது. அப்படி இருந்தும்கூட, மொத்த உற்பத்தி விழுக்காடு (ஜி.டி.பி.) வளர்ச்சி பாதிக்கப்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.

உள்நாட்டில் புழக்கத்தில் இருந்த கருப்புப்பணத்தைக் கணிசமாகவே குறைத்த சாதனையை அவரது அரசு செய்திருக்கிறது.கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட, தாங்களாகவே முன்வந்து வருவாயைத் தாக்கல் செய்யும் திட்டத்தின் மூலம், ரூ.65,250 கோடி கருப்புப்பணம் கணக்கில் காட்டப்பட்டது. ரூபாய் நோட்டுச் செலாவணி செல்லாததாக்கப் பட்டதும், தானே முன்வந்து கணக்குக்காட்ட வாய்ப்பளித்ததும், புழக்கத்தில் உள்ள கருப்புப் பணத்தை கணிசமாகவே குறைத்திருக்கிறது என்று நம்பலாம்.


கடந்த ஆண்டின் இன்னொருசாதனை, நேரடி மானியங்களை உறுதிப்படுத்தி, அதன்மூலம் அரசின் மானியங்கள் தவறான முறையில் மடை மாற்றம் செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. 45 துறைகள் சார்ந்த 217 திட்டங்களுக்கான மானியங்களை, நேரடியாக பயனாளிகளுக்கு வங்கிக்கணக்கில் சேர்க்கும்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பிரதமரின் "ஜன் தன்' திட்டத்தின் மூலம் 33.33 கோடி பயனாளிகளுக்கு 2016-17இல் ரூ.74,502 கோடி நேரடிமானியம் வழங்கப்பட்டிருக்கிறது. நேரடிமானியம் வழங்குவதன் மூலம் ரூ.49,000 கோடி அரசுக்கு மிச்சமாகி இருக்கிறது.


நெடுஞ்சாலை அமைப்பதில் இதுவரை இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2015-16 இல் நாளொன்றுக்கு 16 கி.மீ. சாலை போடப்பட்டது என்றால் 2016-17இல் நாளொன்றுக்கு 23 கி.மீ. சாலை போடப்பட்டிருக்கிறது. 

ரூபாய் நோட்டு செல்லாததாக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகள், மக்களை வெறுப்படையச் செய்வதற்கு பதிலாக, அரசின் துணிச்சலைப் பாராட்டச் செய்தது. எல்லைப்புறப் பிரச்னையிலும், மாவோயிஸ்ட் பிரச்னையியும், மக்கள் மனதில் தேசப்பற்றை மேலும் அதிகரித்திருக்கின்றன.  எப்போதும் இல்லாத அளவுக்கு அவர்மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அதுதான் மோடி மேஜிக் போலும்!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.