ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) இந்தியா, பாகிஸ்தான் உறுப்புநாடுகளாக இணைந்தன. இதைத் தொடர்ந்து நடந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘‘மனிதகுலத்தை அச்சுறுத்தும் தீவிரவாத்தை ஒழிக்க உறுப்பு நாடுகள் ஒருங்கிணையவேண்டும்’’ என அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பிய மற்றும் ஆசியநாடுகள் அடங்கிய பொருளாதார, அரசியல், ராணுவ ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஒ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 1996-ல் உருவாக்கப் பட்டது. சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் உள்ளன.

இந்த அமைப்பின் உச்சிமாநாடு கஜகஸ்தானில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். இந்தகூட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் எஸ்சிஓ அமைப்பில் முறைப்படி இணைந்தன. இதைத்தொடர்ந்து கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர் பயேவாவை மோடி சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

இந்நிலையில் நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது எஸ்சிஒ அமைப்பில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பதற்கு ஆதரவு அளித்த சீனாவுக்கு நன்றி தெரிவிக்கப் பட்டது. மேலும் இருநாடுகளும் பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பு நல்குவது, தொடர்புகளை வலுப்படுத்துவது, சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது, பரஸ்பரம் தங்கள் நாட்டின் பிரச்சினைகள், கவலைகளுக்கு மதிப்பளிப்பது, சர்ச்சைகளை கவனமாக கையாள்வது ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர்.

இந்தியா சீனா உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த சூழலில், பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய தாவது:மனித சமுதாயத்துக்கு தீவிர வாதம்தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் கூட்டாக இணையவேண்டும். ஆசிய பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க விரிவான போக்குவரத்து இணைப்பு அவசியம். எஸ்.சி.ஒ நாடுகளுக்கு இடையே இந்தியாவுக்கு ஒத்துழைப்பு இருக்கிறது.

அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக போக்குவரத்து இணைப்பில் கவனம்செலுத்த விரும்புகிறோம். அதே சமயம் பிறநாடுகளின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப் பாட்டில் தலையிடாத வகையில் இந்த இணைப்பு இருத்தல்வேண்டும். போரினால் பாதிப்படைந்துள்ள ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தவும் எஸ்.சி.ஒ நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பருவநிலை மாற்ற விவகாரத்திலும் எஸ்.சி.ஒ. நாடுகள் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.