பொதுமக்கள் அனைவரும் வங்கி சேமிப்புக்கணக்குத் தொடங்கியதன் மூலம், பொதுமக்களின் வங்கிசேமிப்புத் தொகை ரூ. 65 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.


நாகையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்தியஅரசின் மக்கள் நலத்திட்டங்கள் விளக்கக் கருத்தரங்கத்தில் மேலும் அவர் பேசியது: 1969-ம் ஆண்டில் 14 வங்கிகளை தேசியமயமாக்கி அறிவித்த மறைந்த முன்னாள்பிரதமர் இந்திரா காந்தி,  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்  ஏழைகளுக்கு சேவையாற்றும் பணியை மேற்கொள்ளும் என அறிவித்தார்.


மக்களின் ஒத்துழைப்பு இல்லாத பொருளாதாரவளர்ச்சி சாத்தியமற்றது எனக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்கள் அனைவரும் வங்கியுடன் இணையவேண்டும் எனக் கூறி, அறிமுகம், தொகை ஏதுமில்லாமல் பொதுமக்கள் வங்கிகளில் கணக்குத்தொடங்க வழிவகை செய்தார். இதன்மூலம், 2014-ஆம் ஆண்டு வரை 4 கோடியாக இருந்த வங்கிக்கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை தற்போது 29 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், பொதுமக்களின் வங்கிசேமிப்புத் தொகை ரூ. 65 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.ஆண்டுக்கு ரூ. 12 மட்டுமே பிரிமியாக செலுத்தும் விபத்துக்காப்பீட்டுத் திட்டம் மிகச்சிறப்பான திட்டம். இத்திட்டத்தில் இந்தியாவில் இதுவரை 10 கோடிபேர் இணைந்துள்ளனர். தமிழகத்தில் 65.87 லட்சம் பேரும், நாகைமாவட்டத்தில் 1.73 லட்சம் பேரும் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். உலகில் அதிகவிபத்துகள் நடைபெறும் நாடாக இந்தியா குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் ஆண்டு தோறும் சுமார் 5 லட்சம் விபத்துகள் நடப்பதாகவும், 1.5 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.


இந்நிலையில், மத்திய அரசு செயல் படுத்தும் ஆயுள் பாதுகாப்புத்திட்டம் மக்களிடையே பெரும்வரவேற்பை பெற்ற திட்டமாக உள்ளது. இத்திட்டத்தில், இதுவரை 3 கோடிபேர் இணைந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 22.49 லட்சம் பேரும், நாகை மாவட்டத்தில் மட்டும் 58,819 பேரும் ஆயுள் பாதுகாப்புத்திட்ட காப்பீடு பெற்றுள்ளனர். இதேபோல, மத்திய அரசு செயல்படுத்தும் ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டம் மிகச் சிறப்பான எதிர்காலப் பயனளிக்கும் திட்டமாகும்.


இந்தியாவில் தற்போது அனைத்து துறைகளும் வளர்ச்சிப்பெற்று வருகின்றன. இதில், விவசாயத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாய கடனுக்காக மத்தியஅரசு ரூ. 10 லட்சம் கோடி நிதிஒதுக்கீடு செய்திருப்பதே இதற்கு உதாரணம்.


மத்திய அரசு செயல்படுத்தும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில், சாகுபடிக்கு முன்பும், சாகுபடி காலத்திலும், சாகுபடிக்குப் பிந்தையகாலத்திலும் பயிருக்கு ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
மக்கள்நலன் கருதி மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களில் அனைத்து மக்களுக்கும் பயன்பெறச் செய்யும் விழிப்புணர்வை மாணவ, மாணவிகளும், கல்விநிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும் என்றார்  பொன். ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.