சிறந்த அறிவு என்பது வாசிப்பு, எழுத்தறிவு என்பதோடு நின்றுவிடக்கூடாது; அது, சமூக – பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


கேரளத்தில் 1945-ஆம் ஆண்டில் ஊரகப்பகுதிகளில் நூலகங்களை நிறுவி, மாநிலமக்கள் எழுத்தறிவு பெற பெரும் பங்காற்றியவர் பி.என்.பணிக்கர். கேரளத்தின் 'நூலகத்தந்தை' என்று அழைக்கப்படும் அவரது பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளையில், 'வாசிப்பு மாதம்' என்ற ஒருமாத வாசிப்பு நிகழ்ச்சியை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:


சிறந்த அறிவு என்பது, வாசிப்பு, எழுத்தறிவு என்பதோடு நின்றுவிடக்கூடாது, அது, சமூக – பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்வகையில் இருக்க வேண்டும்.இளைஞர்கள், வாசிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். வாழ்த்துகளை தெரிவிக்கும்போது பூங்கொத்துகளுக்குப் பதிலாக, புத்தகங்களை பரிசாகக்கொடுங்கள். வாசிப்பை விட சிறந்தமகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது, அறிவைவிட சிறந்த தோழன் யாரும் இருக்க முடியாது.


சிறந்த சமூகத்தையும், நாட்டையும் உருவாக்கும் ஆற்றல் இளையசமூகத்தினரிடம் உள்ளது. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்தியாவை அறிவு மற்றும் ஞானத்துக்கான இடமாக மீண்டும் உருவாக்குவோம்.
நாட்டிலேயே 100 சதவீத எழுத்தறிவுபெற்றவர்கள் நிறைந்த முதல் மாநிலம், கேரளம் ஆகும். அதேபோல், 100 சதவீத தொடக்கக் கல்வி பெற்ற மாநிலமும் இதுவேயாகும். எழுத்தறிவில், நாட்டுக்கே ஒளி விளக்காகவும், ஊக்கசக்தியாகவும் இந்த மாநிலம் திகழ்கிறது.


இந்தச் சாதனைகள் அனைத்தும், அரசால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்க முடியாது. இதில், பொது மக்களும், தன்னார்வ அமைப்பினரும் பெரும் பங்காற்றியுள்ளனர். ஒரு படித்தபெண், 2 குடும்பங்களுக்கு கற்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது. உண்மையில் அவர், 2 தலைமுறைகளுக்கு கற்பிக்கிறாள் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.