மூன்றாவது சர்வதேச யோகா தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஏற்பாடு செய்துவருகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களில் யோகாசன சிறப்புபயிற்சி முகாம்களை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

லக்னோவில் உள்ள ராம்பாய் அம்பேத்கர் திடலில் பிரதமர் மோடி தலைமையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து மாபெரும் யோகாசன நிகழ்ச்சி நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் மழைபெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், விழா எக்காரணத்தை கொண்டும் தடைப்படாமல் இருக்கதேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட மாஜிஸ்திரேட் குஷல் ராஜ்ஷர்மா தெரிவித்துள்ளார்.

விழாவுக்கு முன் நேற்று நடத்தப்பட்ட ஒத்திகைகளின்போது சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து நாளைய நிகழ்ச்சியில் இது போன்ற இன்னல்களை தவிர்க்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் விழா என்பதால் லக்னோ நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யயப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனைபடைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் யோகாசன விழாவில் பதாஞ்சலியை சேர்ந்த 14,500 ஆதரவாளர்கள், 10,600 தேசிய மாணவர்படை மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்தை சேர்ந்தவர்கள், 8000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், 5200 காயத்ரிபரிவார், 4000 வாழும் கலை இயக்கம், 800 பிரம்ம குமாரிகள், 2500 பாதுகாப்பு மற்றும் மத்திய படை அதிகாரிகள், 200 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இது தவிர ரம்ஜான் நோன்பு நோற்கும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களும் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் யோகா ஃபார் ஹார்மனி அண்ட் பீஸ் என்ற வாசகம் அடங்கிய வெள்ளை நிற சட்டை அணிந்து கொள்ள ஆடை குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும்பகுதியை சுற்றி 50-க்கும் அதிகமான பிரம்மாண்ட எல்இடி திரைகள், 25 கழிவறைகள், 19 குடிநீர் தொட்டிகள் மற்றும் மூன்று மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன.

முன்னதாக, 21-6-2015 அன்று டெல்லி ராஜபாதையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகுழந்தைகள் உள்பட சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டெல்லியில் உள்ள 152 வெளிநாட்டு உயர்தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பல வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.

அன்றைய யோகாசன நிகழ்ச்சியில் 35 ஆயிரத்து 985 பேர் பங்கேற்றதாக கணக்கிட்டுள்ள கின்னஸ் நிறுவனம், உலகிலேயே முதன்முதலாக அதிக நபர்கள் ஒரே இடத்தில் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி என்ற உலக சாதனையில் அன்றைய நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த சாதனையை உத்திரப் பிரதேச தலைநகரான லக்னோவில் இன்று நடைபெறும் யோகாசன விழா முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.