சுதேசிக் கப்பல் கம்பெனியை சுதேசி ஆண்டாக அனுஷ்டிக்கப்பட்ட 1906-ல் தான் பாரத சுதேசிய இயக்கத்திற்கே சிகரம் வைத்தாற்போன்று தமிழகத்தில் தென்கோடியிலுள்ள தூத்துக்குடியில் சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரம்பிள்ளை தொடங்கினார். அவர் கப்பல் கம்பெனியை தொடங்கியதற்கான பின்னணியை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாரதநாட்டின் பாரம்பிரியக் கப்பல்கள் மூலமாக நடைபெற்றுவந்த வியாபாரத்தினை முடக்க 1801ஆம் ஆண்டு ஜூன் மாத்தில் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் "இந்தியர்கள் எந்த ஒரு கப்பலையும் கட்ட அனுமதிக்கக்கூடாது என்றும் , எந்தக்கப்பலிலும் இந்தியர்கள் சிப்பந்திகளாக பணி புரிய அனுமதிக்கக்கூடாது என்றும்," இங்கிலாந்து வியாபாரிகள் வாதிட்டனர்,

1814ல் நாடாளுமன்றம் இது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர செலக்ட் கமிட்டி ஒன்றை நியமித்தது, இந்தக் கமிட்டி தந்த அறிக்கையின் படி சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.

"இங்கிலாந்து துறைமுகத்திலிருந்து வரும் கப்பல் மாலுமிகள் ஆங்கிலேயர்களாகவே இருக்க வேண்டும்,இல்லாவிடில் அக்கப்பல் இங்கிலாந்தின் எந்த ஒரு துறைமுகத்திற்குள்ளும் வர அனுமதிக்கபட மாட்டாது," இவ்வாறு பிரிட்டிஷ்காரர்கள் பாரதத்தின் கப்பல் தொழிலையும், வியாபாரத்தினையும் 1814ல் கருவருத்தனர், இந்தநிலை சுமார் முக்கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்தன,

பிரிட்டிஷ்காரர்களிடம் தமிழர்கள் பறிகொடுத்துவிட்ட கடல் வாணிபத்தினை மீட்க விரும்பினார் வ.உ.சி, தூத்துக்குடி வணிகர்கள் சிலருடன் கலந்து ஆலோசித்துவிட்டு "சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி"யைத் தொடங்கினர்,

பாண்டிய மன்னர்கள் காலத்திற்கும் ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலிலும், கடல்வழி வியாபாரத்திலும் உலகிலேயே தலைசிறந்து விளங்கினார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை, பரங்கியரிடம் நாம் இழந்த வாணிபத்தினை கைப்பற்றுவதற்கான முதல் காரியாமாக "சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி"யைக் கருதினார்,

இதனை வ.உ.சி வாக்கின் மூலமாகவே பின் வருமாறு அறிவோம்,

"தேச ஆட்சியின் மீட்சிக்கான முதல்வழி வியாபாரம் செய்யவந்த வெள்ளையனை விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான், வெள்ளையர்களை விரட்டுவது என்றால் நம்மவர்க்கு கடல் ஆதிக்கம் வேண்டும், ஒரு காலத்தில் மேற்கே ரோம்தேசத்திற்கும், கிழக்கே ஜாவா சுமத்திராவிற்கு அப்பாலும் தமிழ்க்கப்பல் போய்வந்தது, அவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தனர்,எனவே தமிழர்கள் மீண்டும் கடல்மேல் செல்வது குறித்து ஆராய்ந்தேன், அதன் விளைவுதான் "சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி",

1882ம் ஆண்டு இந்தியக் கம்பெனி சட்டப்படி 1906 ல் "சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" பதிவு செய்யப்பட்டது, இக்கம்பெனியின் வங்கியாக இருக்க நேஷனல் பேங்க் ஆப் இந்தியா இசைவு தெரிவித்தது,

கம்பெனிக்கு சொந்தமாக "காலியோ" ,"லாவோ" என்ற பெயருடைய இரண்டு கப்பல்கள் வாங்கப்பட்டன. இரண்டு கப்பல்கள் வாங்குவதில் வெற்றிபெற்ற வ.உ.சிதம்பரம்பிள்ளையை தேசியப் பத்திரிகைகள் வானளாவி புகழ்ந்து தள்ளின,

பாண்டியர்கள் காலத்திற்கு பின்னர் கப்பல் தொழிலில் தலைதூக்கிய வ.உ.சிதம்பரம்பிள்ளைக்கு " கப்பலோட்டிய தமிழன்" என்று பாலகங்காதரத் திலகர் பட்டம் சூட்டினார்,

வங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம்

Leave a Reply