காஷ்மீர் புதிய முதலமைச்சராக 1-ந் தேதி பதவி யேற்க இருக்கும் முப்திமுகமது சயீத் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதில் கூட்டணி அமைச் சரவையில் இடம்பெறுவோர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. ஜம்முவில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.

.

பிஜேபி, பிடிபி இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக இழுபறி நீடித்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை பிடிபி தலைவர் மெஹ்பூபா டெல்லி வந்து பிஜேபி தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசியபோது உடன்பாடு ஏற்பட்டது.

கூட்டணி ஆட்சி பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. மார்ச் 1-ந் தேதி ஜம்முவில் ஸொரவார் மைதானத்தில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முப்தி முகமது சயீத் முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கும் பிற அமைச்சர்களுக்கும் கவர்னர் என்.என். வோஹ்ரா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்கு முன்னதாக பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று மாலையே முப்தி முகமது சயீத் டெல்லி வந்துவிட்டார்.அவரை நிருபர்கள் சந்தித்தபோது, நாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பது குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று மட்டும் தெரிவித்தார்.

முப்தி முகமது சயீத் 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இவர் 1989ல் விபி.சிங் பிரதமராக இருந்தபோது உள்துறை அமைச்சராக இருந்தார். அந்த ஆட்சிக்கு பிஜேபி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமருடனான சந்திப்பு குறித்து முப்தி முகமது சையத் கூறுகையில், 1-ந் தேதி நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சம்மதித்து உள்ளார். குறைந்தபட்ச பொதுசெயல் திட்டம் பற்றிய விவரத்தை 1-ந் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடுவோம் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், வரலாறு எங்களுக்கு 2-வது வாய்ப்பை தந்திருக்கிறது. மக்கள் தீர்ப்பை நாங்கள் மதிப்போம். ஜம்முகாஷ்மீர் மக்கள் எண்ணங்களையும், எங்களது இதயங்களையும் ஒன்று படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மாநிலத்தில் மேலும் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வோம் என்றார்

Leave a Reply