தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் அகில இந்தியமருத்துவ ஆராய்ச்சி மையத்தை (எய்ம்ஸ்) மத்திய அரசு அமைப்பதற்கு அரசுநிலம் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"எய்ம்ஸ்' மையத்தை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு உடனடியாக தொடங்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி சனிக்கிழமை சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம், பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ மையம் (எய்ம்ஸ்) போன்று மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

5 இடங்களில் நிலம்தயார்: "எய்ம்ஸ்' மையத்தை மத்திய அரசு அமைப்பதற்காக செங்கல்பட்டு, புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்களில் அரசுநிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக உள்ளதாகவும் இவற்றில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை மத்திய அரசு தேர்வுசெய்து "எய்ம்ஸ்' மையத்தை அமைக்கலாம்.

சாலை, ரயில் வசதி, தண்ணீர், மின்சாரவசதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் இந்த 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது .

உயர்தர மருத்துவ கல்வி: தமிழகத்தில் "எய்ம்ஸ்' மையம் விரைவாக அமையும் நிலையில், மாணவர்களுக்கு தரமான மருத்துவ கல்வி, பொதுமக்களுக்கு தரமான மருத்துவசேவை, மருத்துவ நிபுணர்களுக்கு ஆராய்ச்சி வசதி ஆகியவை கிடைக்கும். எனவே, தமிழகத்தில் "எய்ம்ஸ்' மையத்தை அமைக்கும் மத்திய அரசின் முயற்சிகள் அனைத்துக்கும் விரைவான ஒத்துழைப்பு அளிக்கத்தயார் என சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply