"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

 

"இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?

 

என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.

நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்?

 

ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.

 

ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

 

ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்." (ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து…) 3.தொகுப்பு: இதயக்கனி ஏப்ரல் 2013 இதழிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.