ஜிஎஸ்டியில் ஒரு பொருளின் விலை குறைந்தாலும், அதைப் பயன்படுத்தி விலை ஏற்றுவதும், விலை குறையப் போகும் பொருளை, விலை ஏறுவதாகக் கூறி முன்கூட்டியே அதிக விலைக்கு விற்பதும் வியாபார நுணுக்கமா? இல்லை ஏமாற்றுவேலை!

அப்படித்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் இரு சக்கர மற்றும் கார் விலைகள் உயரும் என்று பயமுறுத்திய ஒரு சில வாகன டீலர்களின் மோசடிகள், அவர்கள் மொழியில் வியாபார யுக்தி. இவர்களிடம் சிக்கிய வாடிக்கையாளர்களின் நிலை பரிதாபம்.

ஜிஎஸ்டி என்றால் என்ன, அதனை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று தெரியாத வாடிக்கையாளர்கள் பலர் ஜிஎஸ்டி முறை அமல்படுத்துவதற்கு முன்பாக வாகனம் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தால், அவர்கள் தான் இதுபோன்ற டீலர்களின் சரியான தேர்வு.

ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தால் இந்த வண்டியின் விலை 2 ஆயிரம் ஏறுகிறது, இந்த வண்டியின் விலை ரூ.5 ஆயிரம் உயரும் என்று சொல்லி, உடனடியாக வாங்கிவிடுமாறு கட்டாயப்படுத்தி பலர் ஜிஎஸ்டிக்கு முன்பாகவே புது வண்டியும் சக்கரமுமாக பயணிப்பதை பார்க்க முடிகிறது.

ஒரு சில ஊடகங்களிலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் விலை உயரும் பொருட்களின் பட்டியலில் வாகனங்களும் இடம்பெற்றிருந்தன. அதாவது, ஜிஎஸ்டியில் அதிக வரி விதிப்பு அதாவது 28% வரிக்கு உள்ளாகும் பொருட்களின் பட்டியலில் வாகனங்கள் இடம்பெற்றதே இதுபோன்ற செய்திகளுக்குக் காரணம்.

அதைப் பார்த்து, ஏற்கனவே தகர டப்பா போல தாம் வைத்திருக்கும் வாகனத்தை மாற்றிவிட வேண்டும் என்று நினைத்திருந்தவர்களும் ஜூலை 1ம் தேதிக்குள் வண்டி வாங்க அவசரம் காட்டக் காரணமாகிவிட்டது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் கிடைக்கும் லாபத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக, இந்த வாகனத்தின் விலை ரூ.3 ஆயிரம் குறைகிறது, அந்த வாகனத்தின் விலை ரூ.1,500 குறைகிறது என்ற விளம்பரங்கள் வெளியானது.

அதாவது உண்மை என்னவென்றால், ஜிஎஸ்டி வரி விதிப்பில் இரு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்படுகிறது. இதைத்தான் டீலர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரி உயருகிறது என்ற பூதத்தைக் கிளப்பக் காரணம். ஆனால், அதற்கு முந்தைய வரி விதிப்பில் உற்பத்தி முதல் சாலை வரி என்று பல வகைகளில் 30% அளவுக்கு வரி விதிக்கப்பட்டிருந்தது தான். 

எனவே, ஜிஎஸ்டி முறையில் அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டாலும், இது முந்தைய வரி விதிப்போடு ஒப்பிடுகையில் 2% குறைவு என்பதே.

அதாவது ஒரு வாடிக்கையாளர் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்திருப்பதால், இதுவரை செலுத்திவந்த சுங்க வரி, மதிப்புக் கூட்டப்பட்ட வரி, சிஎஸ்டி என ஒரு பெரிய பட்டியலில் இருக்கும் வரிகளைக் கட்ட வேண்டியதில்லை. மாறாக, நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஒரே ஒரு வரியை செலுத்தினால் போதுமானது. இது தமிழகத்தை விட, அதிக வரி விதிப்பு அமலில் இருக்கும் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா போன்ற மாநில மக்களுக்கு கூடுதல் பலனளிக்கும் என்பது மேலதிகத் தகவல்தான்.

இதனால் தான் இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியும், ராயல் என்பீல்டும் தங்களது இரு சக்கர வாகனங்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளன. இதே போல, ஹோண்டா கார்ஸ் இந்தியா, போர்ட் இந்தியா, ஹோண்டா மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் இந்தியா, சுசூகி என அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் வாகனங்களுக்கு விலைக் குறைப்பை அறிவித்துள்ளன.

பழைய முறையில் ஒட்டுமொத்த வரியோடு ஒப்பிடுகையில் காருக்கான ஜிஎஸ்டி வரி குறைந்திருப்பதால், ஹோண்டா கார்ஸ் இந்தியா, மாடல்களைப் பொறுத்து ரூ.1.31 லட்சம் வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

ராயல் என்ஃபீல்ட் வாகனங்களின் விலை மாடலுக்கு ஏற்ப ரூ.2,300 வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ், மாடலுக்கு ஏற்ப ரூ.4,150 வரை விலைக் குறைப்பை மேற்கொண்டுள்ளது.

பிஎஸ்3ல் விட்டதை(?) ஜிஎஸ்டியில் பிடித்து விடும் முயற்சியில் இறங்கிய வாகன டீலர்களின் வியாபார யுக்தியே இப்படி என்றால், இன்னும் இன்னும் ஏராளமான வணிகர்கள் எப்படி எல்லாம் ஜிஎஸ்டியை பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதன் மூலம் ஜிஎஸ்டியின் பலனை கடவுளே நினைத்தாலும் வாடிக்கையாளர்களிடம் சென்று சேராமல் இதுபோன்ற ஒரு சில வணிகர்கள் நிச்சயம் பார்த்துக் கொள்வார்கள் என்பது நன்கு புரிகிறது.

நன்றி தினமணி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.