தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங் குளத்தில், சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 307-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பா.ஜ.க. மாநிலத்தலைவர் தமிழிசை, ’’கடலை மிட்டாய் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைச்சுட்டோம், அடுத்ததா, தீப்பெட்டிமீதான வரியையும் குறைப்போம்’’ என்றார்.

கட்டாலங்குளம் மணி மண்டபத்திலுள்ள அழகு முத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ’’சத்தான இனிப்புப்பண்டமான கடலைமிட்டாயை உலகுக்கு அறிமுகம் செய்தது கோவில்பட்டிதான். கடலைமிட்டாய் மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாகக்  குறைத்துள்ளது மத்திய அரசு. இதேபோல, பகுதி மற்றும் முழுநேர இயந்திரதீப்பெட்டித் தொழிலுக்கான 18 சதவிகித வரியை 12 சதவிகிதமாகக் குறைக்கவலியுறுத்தி, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் விடுத்த கோரிக்கைகுறித்தும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளேன். உறுதியாக, தீப்பெட்டித்தொழிலுக்கான வரி விதிப்பு குறையும்.

எந்தத்துறையை சார்ந்திருந்தாலும், ஜிஎஸ்டி வரியால் எந்தவித இழப்பும் ஏற்பட்டு, உற்பத்தியாளர் மற்றும் தொழிலாளர்கள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் பா.ஜ.க. அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது. ஜனநாயக முறைப்படிதான் ஜிஎஸ்டி-க்கான வரிவிதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பலமுனை வரியை ஒரு முனை வரியாகக் குறைத்த நடவடிக்கைதான் ஜிஎஸ்டி. இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், ஜிஎஸ்டி மீது பரப்பப்படும் தவறான கருத்துக்களை யாரும் நம்பவேண்டாம். ஜிஎஸ்டி வரியைப் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தவே தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், வெங்கைய நாயுடு உள்ளிட்ட  ஐந்துமத்திய அமைச்சர்கள் ஜிஎஸ்டி தொடர்பான விழிப்புஉணர்வு கூட்டங்களில் கலந்துகொண்டு விளக்கிவருகின்றனர்.

மாட்டிறைச்சி விற்பனைக்கோ, சாப்பிடுவதற்கோ மத்தியஅரசு தடை விதிக்கவில்லை. மத்திய அரசின் உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. விவசாயத்துக்கு அன்றி, வரன்முறை இல்லாமல் பசுக்களைக் கடத்திச் சென்று, இறைச்சியாக்குவதற்குத்தான் தடை விதித்துள்ளது. மாட்டிறைச்சி விவகாரத்தில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கும் எந்தவிதசம்பந்தமும் இல்லை’’ எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.