தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று பாஜக மாநிலத் தலைவரும், அக் கட்சியின் நாகர்கோவில் தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவிலில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 134 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2-ம் கட்டமாக ஏறக்குறைய 60 வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.

பாஜகவின் தேர்தல் வெற்றி இரட்டை இலக்கமாக இருக்கும் என்ற பரிபூரண நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

1967-க்குமுன் இருந்த தேசிய சிந்தனையைப்போல, தமிழகத்தில் மீண்டும் தேசியக் கட்சி ஆட்சி வேண்டும் என்ற விருப்பம் மக்களிடம் காணப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு சீரழிவு, மதுப்பழக்கத்தால் இளைய சமுதாயத்தை அழிப்பது, விலைவாசி உயர்வு, ஊழலின் மொத்த உருவமாக தமிழகத்தை மாற்றியது போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்தது. ஆனால் கடந்த 44 ஆண்டுகளாக தலைகுனிவைச் சந்தித்து வருகிறது.

பாஜக ஆளும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. அப்படியொரு வளர்ச்சியைத் தமிழகத்தில் கொண்டுவர பாஜக பாடுபடும் என்பதால் தேர்தலில் எங்களுக்கு உறுதியான வெற்றி கிடைக்கும்.

குறுகிய காலத்துக்குள் தமிழகத்தை ஆளும் நிலையை அடைவோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்.

தேர்தல் கூட்டணி விஷயத்தில், சுப்பிரமணியன்சுவாமியுடனும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடனும் கூட்டணி குறித்து பாஜக பேசிவருகிறது.

200 தொகுதிக்குக் குறையாமல் பாஜக போட்டியிடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரத்துக்காக அத்வானி, நிதின்கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் வரவிருக்கின்றனர்.

குளச்சல் துறைமுகம், சாய் சப்சென்டர் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது, ஏழை இந்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவது உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்யப்படும்.

கூட்டணிக்காக எங்களது தனித்தன்மையை விட்டுக்கொடுக்க தயார் இல்லை. மத்திய மந்திரியாக இருந்த நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காரணம், அகில இந்திய தலைமைக்கு கட்டுப்படுவதுதான். தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் பாரபட்சமின்றி இருக்க வேண்டும். எனது காரில்கூட சோதனை நடந்தது. இதை வரவேற்கிறேன்.

நான் எம்.பி.யாக இருந்தபோது எப்படி செயல்பட்டேன் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த மாவட்டம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் எந்த மதமும் புறக்கணிக்கப்படக் கூடாது. மத உணர்வுகள் காக்கப்பட வேண்டும். தேர்தலில் பிரித்தாளும் சூழ்ச்சி கையாளப்பட்டால் பாதிப்பு மக்களுக்குத்தான் என்றார்.

Tags:

Leave a Reply